சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி கிருபாகரன், ஆகஸ்ட் 20ஆம் தேதி பணி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.
பிரிவு உபச்சார உரை நிகழ்த்திய அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மக்கள் நீதிபதி என அழைக்கப்படும் நீதிபதி கிருபாகரன் ஓய்வு பெறுவது மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.
கண்கலங்கிய நீதிபதி
பின்னர் பேசிய நீதிபதி கிருபாகரன், தாய் - தந்தை, ஆசான்களை நினைவு கூர்ந்த போது கண்கலங்கினார். ஒரு போதும் தன்னை நீதிபதியாக நினைத்து கொண்டதில்லை எனவும், சாதாரண நபராகவே இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
125 வயது உயர் நீதிமன்ற கட்டிடத்தில் நீதிபதியாக பணியாற்றியதில் பெருமை கொள்வதாக குறிப்பிட்ட அவர், வழக்கறிஞர் தொழிலின் புனிதத்தை மீட்டெடுக்க வேண்டும் என இளம் வழக்கறிஞர்களுக்கு அறிவுறுத்தினார்.