சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இளங்கோ தெருவில் 250 வீடுகள் நீர்நிலைகளின் ஆக்கிரமிப்பில் இருப்பதாக தனிநபர் தொடர்ந்த வழக்கில் வீடுகளை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு வீடுகளை அகற்றும் பணியை பொதுப்பணித்துறை அலுவலர்கள் மேற்கொண்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பொதுப்பணித்துறை அலுவலர்கள் காவல்துறை அலுவலர்களின் உதவியுடன் வீட்டை இடிக்கும் பணியை மேற்கொண்டனர்.
கிட்டதட்ட இன்று( மே7) வரை 80 வீடுகள் இடிக்கப்பட்டு விட்டன. இதனை அறிந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவர் நல்லகண்ணு அப்பகுதிக்கு இன்று (சனிக்கிழமை) சென்றார். அப்பகுதி மக்கள் நல்லகண்ணுவிடம் அலுவலர்கள் செய்யும் செயல்பாடுகளை எடுத்து கூறினர்.
இப்பகுதியில் ஆய்வு செய்த நல்லகண்ணு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு அலைபேசி வாயிலாக அப்போதே தொடர்பு கொண்டார். அப்போது வீடுகளை இடிக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்தார். அதற்கு என்னுடைய கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக மக்களிடம் நல்லகண்ணு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து நல்லகண்ணு செய்தியாளார்களை சந்தித்த அவர் "1971 ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இடம் தான் இளங்கோ தெரு. தனிநபர் தொடுத்த வழக்கில் வீடுகளை இடிக்கும் பணியை மேற்கொண்டுள்ள அலுவலர்கள், இந்த வழக்கை எதிர்த்து அரசு தரப்பில் ஏன் மேல்முறையீடு செய்யவில்லை.
இங்கே உள்ள மக்கள் கிட்டத்தட்ட 70 ஆண்டுகளாக இருக்கின்றனர். குழந்தைகளுக்கு தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் வீடுகளை இடிப்பது ஏற்புடையது அல்ல. திமுக அரசு பதவியேற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில் வீடுகளை இடிக்கும் பணிகளை மேற்கொண்டிருப்பது வேதனையாக இருக்கிறது" என்றார்.
இதையும் படிங்க :திமுக அரசின் ஓராண்டு ஆட்சி நிறைவு: கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மரியாதை