சென்னை:தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், ராஜராஜேஸ்வரி தெருவை சேர்ந்தவர் சீதாராமன் (63). இவர் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவராக உள்ளார். இவரது வீட்டில் கடந்த 24ம் தேதி அதிகாலை மர்ம நபர்கள் இருவர் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் தேசிய செயலாளருமான எச்.ராஜா, சீதாராமன் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்பாக தேசிய புலனாய்வு முகமை என்.ஐ.ஏ தமிழ்நாட்டில பல்வேறு பி.எப்.ஐ அமைப்பின் அலுவலகங்கள், வீடுகளில் சோதனை நடத்தியது. இது தமிழ்நாட்டில் மட்டும் நடைபெறவில்லை. 15 மாநிலங்களில் நடைபெற்றது. இது மூன்று மாதத்திற்கு மேல் தீர ஆய்வு செய்து உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த சோதனை நடைபெற்றது.
தமிழ்நாட்டில் இந்த சோதனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இதுவரை 20 இடங்களுக்கு மேல் ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி ஆகிய நிர்வாகிகளின் வீடுகள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆண்டவனின் அருளால் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாதது நிம்மதிக்குரிய விஷயம் ஆனால் அமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
இதில் சிட்லபாக்கத்தில் ஆர்எஸ்எஸ் தாம்பரம் பகுதி சங்கசாலக் மாவட்ட தலைவர் சீதாராமன் வீட்டில் நடைபெற்று இருக்கும் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. குற்றம் செய்பவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல குற்றத்தை செய்ய தூண்டுபவர்களும் குற்றவாளிகள் தான்.