தமிழ்நாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு, வெங்காயத்தின் விலை ஏற்ற, இறக்கம் கண்டு வருகிறது. கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக உள்நாட்டு உற்பத்தி 30 முதல் 40 விழுக்காடுவரை குறைந்துள்ளதே இந்த பற்றாக்குறைக்குக் முக்கிய காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் ஒரு கிலோ வெங்காயம் விலை, 160 ரூபாயை எட்டியுள்ளதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில், கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு சங்கங்கள் நடத்தும், பண்ணை பசுமை காய்கறி கடைகளில், ஆந்திர வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கிடையே, மக்களின் வெங்காய பற்றாக்குறையை போக்க எகிப்து நாட்டில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
எகிப்து வெங்காயம் சந்தைக்கு வந்த பிறகு வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று அதன் விலை 10 ரூபாய் உயர்ந்துள்ளதாகவும் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருவதாகவும் மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர்.