சென்னை:சென்னையில் வாகனத்தில் கொண்டு செல்லப்பட்ட 2.5 மெட்ரிக் டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மாநகராட்சி அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 28 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்டுள்ளது.
தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி மெரினா, பெசன்ட் நகர் மற்றும் திருவான்மியூர் கடற்கரைகளில் அமைந்து இருக்கும் கடைகளிலும் மாநகராட்சியின் சார்பில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டு பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரையில் கடந்த 7 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வுகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்கள், குப்பைத்தொட்டி வைக்காத கடை உரிமையாளர்கள் மற்றும் குப்பைகளைக்கொட்டிய பொதுமக்களுக்கு ரூ.10.600/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.