சென்னைநுங்கம்பாக்கத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான "முத்துநகர் படுகொலை" ஆவணப்படம் குறித்து படக்குழுவினருடன் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மூலமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களைப் பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது. ஆலையின் மூலமாக வரும் பாதிப்பினைத் தாக்காமல் மக்களே தான் போராட்டத்தை நடத்தினர். தனி ஒரு முதலாளிக்காக ஆதரவைப் பார்க்கும்போது கஷ்டமாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஸ்டெர்லைட் ஆலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அரசு வாகனங்களை தீ வைத்தார்கள் என்று கூறுகின்றனர். ஆனால், காவலர்கள் தான் அதை செய்தார்கள் என்று அனைவருக்கும் தெரியும். தற்காப்புக்கு சுட்டதாக கூறுகிறார்கள்; வானத்தை நோக்கி சுட்டு இருந்தாலே பொதுமக்கள் கலைந்து சென்றிருப்பார்கள். ஆனால், அப்படி செய்யவில்லை. இது ஒரு படுகொலை. துணை தாசில்தார் சொல்லித்தான் சுட்டோம் என்றுவேறுசிலர் கூறுகிறார்கள். துணை தாசில்தாருக்கு அந்த உரிமை ஏது?” எனக் கேள்வி எழுப்பினார்.
“துப்பாக்கிச் சூட்டில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் வேறு இடத்திற்கு பணி மாற்றம் பெற்றுச்சென்றுவிட்டனர், அவ்வளவு தான். எடப்பாடி ஆட்சியில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்தது. விடியல் ஆட்சி வந்ததும் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்கள். ஆனால், எதுவும் நடக்கவில்லை. தற்போது அந்த மக்கள் கேட்பது நீதி தான். நாம் தமிழர் ஆட்சி அமைத்தால் யாராக இருந்தாலும் விட மாட்டோம். சுடுவதற்கு யார் அனுமதி கொடுத்தது என்று கேட்டு நடவடிக்கை எடுத்திருப்போம்” எனக் கூறினார்.