சென்னை:பல்லவன் பேருந்து இல்லத்தில், அகவிலைப்படி (DA) உயர்வு மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு சார்பாக இன்று (மார்ச் 15) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் தேமுதிக, நாம் தமிழர் கட்சி போன்ற அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர். மேலும் இந்த போராட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், “பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டைப் பற்றி தெரியுமா? தமிழர்களை சுட்டுக் கொல்லும்போதும், மீனவர்களை சிறை பிடிக்கும்போதும் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? பிரஷாந்த் கிஷோர் பீகார் முதலமைச்சருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், நான் என் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.
வட இந்தியர்கள் தமிழ்நாட்டிற்கு அதிக அளவு வந்த பிறகுதான் குற்றச் சம்பவங்களும், போதைப் பொருள் கலாச்சாரமும் அதிகரித்திருக்கிறது. வடமாநிலத் தொழிலாளர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக என் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்து நான் கவலைப்படுவதில்லை. அதை பொருட்படுத்தவும் இல்லை. வட இந்தியர்கள்தான் தமிழ்நாட்டு இளைஞர்களை தாக்குகிறார்கள். திருப்பூரில் கட்டையை தூக்கிக் கொண்டு தமிழர்களை அடித்தது யார்?” என கூறினார்.
முன்னதாக போராட்டத்தில் பேசிய சீமான், “ஓய்வு பெற்ற போக்குவரத்துத் துறை ஊழியர்கள், அகவிலைப்படி நிறுத்தம் இல்லாமல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராடுகிறார்கள். இது நியாயமான கோரிக்கை. எனவே அரசு இதனைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அகவிலைப்படியை வழங்க வேண்டும். தொலைவில் இருந்து பார்ப்பவர்கள், ‘உங்களுக்கு வேலையே இல்லை. எல்லாத்துக்கும் போராட்டம் செய்வார்கள்’ என கடந்து செல்வார்கள்.