சென்னை:பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதன்பின்னர் செய்தியாளர்களைச்சந்தித்த சீமான், 'உண்மையைப்பேசு, உறுதியாகப்பேசு, அதை உரக்கப்பேசு என எங்களைப்போன்ற இளைய தலைமுறை பிள்ளைகளுக்கு கூறியவர். மலர் மாலைக்கு கழுத்தை நீட்டுவது போல மரணப்படுக்கைக்கு எவன் கழுத்தை துணிந்து நீட்டுகிறானோ, அவனே உண்மையான வீரன் என மான தமிழ் மக்களுக்கு போதித்த மகத்தான பெருமகன் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவரது புகழைப் போற்றுவதில், பெருமைகொள்கிறோம்.
ஆளுநர் உளறி கொட்டுகிறார். ஆங்கிலேயர்கள் என்ன ரிஷியா?... நாட்டை கட்டமைப்பது என்ன ரிஷியின் வேலையா?... தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளாவில் சென்று மாநில சுயாட்சி பேசுகிறார். ஆளுநரை வைத்துக்கொண்டு இரட்டை ஆட்சி நடப்பதாக குற்றம்சாட்டுகிறார். ஆனால், இங்கே உளவுத்துறை, காவல் துறை என பலவற்றை வைத்துக்கொண்டு என்.ஐ.ஏ-விடம் ஏன் தூக்கிக்கொடுத்தீர்கள்?... மாநிலத்திற்கு என்ன அதிகாரம் இருக்கிறது?