சென்னை:மாதவரம் கொசப்பூரில் உள்ள தனது நிலத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் சிலையைத் திறக்க அனுமதிக்கக்கோரி திமுக பொதுக்குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான எம். நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனி நபர் ஒருவருக்கு சொந்தமான பட்டா நிலத்தில் சிலைகளை வைத்துகொள்ள அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற பிறப்பித்த தீர்ப்புகளைத் தாக்கல்செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தாக்கல்செய்யப்பட்டன. தமிழ்நாடு அரசுத் தரப்பில், தனி நபரின் பட்டா நிலத்தில் சிலை வைத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இருந்தாலும், மாநில அரசின் முறையான அனுமதி பெறாமல் சிலை வைக்கக் கூடாது என ஏற்கனவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தமிழ்நாடு அரசின் அரசாணை மற்றும் சிலை திறக்க அனுமதிப்பது தொடர்பாக நவம்பர் 26ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.