சென்னை பள்ளிக் கல்வித் துறை அலுவலக வளாகத்தில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட அலுவலகத்தின் அருகில் மாற்றுத்திறன் மாணவர்களுக்கு கற்பிக்கும் சிறப்பு ஆசிரியர்கள் 10ஆவது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் இன்று ஒற்றைக்காலில் நின்று தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கத்தின் மாநிலத் பொருளாளர் கணபதி கூறும்பொழுது, "கடந்த 20 ஆண்டுகளாக மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்றுநர்களாக கல்வி கற்பித்து வருகின்றோம். தமிழகம் முழுவதும் சிறப்பு மாணவர்களுக்கு பயிற்றுவிப்பதற்காக 1681 பயிற்றுநர்கள் பணிபுரிந்து வருகின்றோம். எங்களுக்கு காலமுறை ஊதியத்தில் பணி நிரந்தரம் வழங்கிட வேண்டும்.
எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி 29ஆம் தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசு எங்களுக்கு பணி நிரந்தரம் செய்யும் வரை இந்தப் போராட்டம் தொடரும். மாற்றுத்திறன் மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க வேண்டும் என தொடர்பு கொள்கின்றனர். அவர்களின் கல்வி பாதிக்கக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமும் தொடர்ந்து கல்வி கற்பித்து வருகிறோம்" எனத் தெரிவித்தார்.