சென்னை: திமுக மகளிர் அணி சார்பில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ (YMCA) மைதானத்தில் நாளை (அக்.14) சனிக்கிழமை மாலை நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த மாநாட்டில், 'இந்தியா' கூட்டணி கட்சியைச் சேர்ந்த முன்னணி பெண் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
அந்த வகையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி செயல் தலைவர் சுப்ரியா சுலே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், பீகார் மாநில பெண் அமைச்சர் லேஷி சிங் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த பெண் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
இவர்களுல் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி ஆகியோர் உச்சகட்ட பாதுகாப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து அவர்களுக்கு வழங்க வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சிறப்பு ஆலோசனை கூட்டம், சென்னை விமான நிலையத்தில் நேற்று (அக்.13) மாலை நடைபெற்றது.
இந்நிலையில் இன்று இரவு 10:40 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னை வரும் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு முழு பாதுகாப்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. அதற்காக டெல்லியில் இருந்து சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனர். அவர்கள் தலைமையில் சென்னை விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.