தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கொட்டும் மழையிலும் தொடரும் போராட்டம்! 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலக்குறைவால் பாதிப்பு! - 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி

Teachers protest in chennai: தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த தேர்தல் வாக்குறுதி 311 ஆன சம வேலைக்கு, சம ஊதியம் என்ற கோரிக்கையை நிறைவேற்ற கோரி, கொட்டும் மழையிலும் 3வது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

SSTA teachers protest in chennai
கொட்டும் மழையிலும் 3வது நாளாக தொடரும் போராட்டம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 30, 2023, 12:11 PM IST

கொட்டும் மழையிலும் 3வது நாளாக தொடரும் போராட்டம்: 60க்கும் மேற்பட்டோர் ஆசிரியர்கள் மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி கடந்த 28ஆம் தேதி முதல் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கைக் குழந்தைகளை வைத்துக் கொண்டு "சம வேலைக்கு, சம ஊதியம்" என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வயது முதிர்வு, வெயிலின் கொடுமை தாங்க முடியாமல், 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் மயங்கிய பின்னர் மருத்துவமனையில் சேர்ப்பதற்கு போதுமான ஆம்புலன்ஸ் வசதியும் இல்லாத நிலை நீடித்து வருவதாக கூறப்படுகிறது.

திமுக சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதி 311ஐ நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒற்றை கோரிக்கையாக பகுதி நேர ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2023 ஜனவரி 1ஆம் தேதி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், ஊதிய முரண்பாட்டை கலைவதற்கான குழுவை அமைத்து, அதன் அடிப்படையில் அறிக்கையை பெற்று 3 மாதத்தில் இவர்களின் ஊதிய முரண்பாட்டை களையப்படும் என 2022 டிசம்பர் மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது அறிவித்து இருந்தார்.

ஆனால், கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என் பகுதிநேர ஆசிரியர்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 25 ஆம் தேதி, பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்தவித சமரச முடிவும் எட்டப்படாததால், திட்டமிட்டப்படி 28 ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலளார் ராபர்ட் கூறும்போது, "திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்-311 இல், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" என அறிவிக்கப்பட்டது. கடந்த 1.6.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 14 ஆண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது 1.6.2009 க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8 ஆயிரத்து 370 என்றும், அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5 ஆயிரத்து 200 என்றும் "ஒரே பணி ஒரே கல்வி தகுதி" என இருந்த போதும் 2 விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டன.

இதனை சரி செய்ய வேண்டுமென போராட்டம் நடத்திய பொழுது, அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் வந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு 'சம வேலைக்கு, சம ஊதியம்' வழங்கப்படும்" என்ற கோரிக்கையை இடம் பெறச் செய்தார்.

புதிய அரசு பதவியேற்று சுமார் 2 ஆண்டு முடிவடைந்த நிலையில், கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் போராட்டம் நடைபெற்றது. அப்போது 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் 1.1.2023 இந்த புத்தாண்டில் முதல் அறிவிப்பாக போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துக்களை கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்போது கல்வித்துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் இப்பிரச்சினை முடிவுக்கு வரும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால் 2009ல் பணியில் சேர்ந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர் ஓய்வு பெற்று வருகிறார்கள். பணி நியமனம் பெற்று 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் பெறும் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம்.

எங்களின் ஒற்றை கோரிக்கையும் திமுகவின் தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள், கை குழந்தைகளுடன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 70க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறோம். சம வேலைக்கு சம ஊதியம் என்ற அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும்" என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் சென்னையில் நேற்று (செப். 29) இரவு பலத்த மழை பெய்தது. அந்த மழையிலும் ஆசிரியைகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாள் போராட்டத்தின் பொழுது, ஆசிரியர்கள் இன்று (செப். 30) காலை முதலே மயங்கி விழுந்து ஆம்புலன்சில் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

இதையும் படிங்க: கர்நாடகா பேருந்தை மறித்து தமிழக விவசாயிகள் போராட்டம்…! தமிழகத்திலிருந்து மின்சாரம் வழங்குவதை துண்டிக்க வேண்டும் என கோஷம்!

ABOUT THE AUTHOR

...view details