சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்தபடி, நடப்பு ஆண்டின் இரண்டாவது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (அக்.9) கூடியது. தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். முக்கியமாக காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை வலியுறுத்தி கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தவிர, மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், இதில் காங்கிரஸ் அரசு எனக் குறிப்பிடாமல், கர்நாடக அரசு என குறிப்பிட்டதே தாங்கள் இந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவு அளிக்காததற்கான காரணம் என பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து, நடைபெற்ற அலுவல் கூட்டத்தின் அடிப்படையில், நாளை (அக்.11) வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி, இன்று (அக்.10) கூடியுள்ள சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2023 - 2024ஆம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது. இதில் நடப்பு நிதியாண்டுக்கான கூடுதல் செலவினங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், இதனைத் தொடர்ந்து அரசு அலுவல்களும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இன்று மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர் அ.ராசேந்திரனுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். இதில் முக்கியமாக, 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு வரிகள் (நிலுவைகளைத் தீர்வு செய்தல்) சட்டமுன்வடிவு, 2023ஆம் ஆண்டு தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இரண்டாம் திருத்தச் சட்டமுன்வடிவு, 2023ஆம் ஆண்டு சீட்டு நிதி தமிழ்நாடு திருத்தச் சட்டமுன்வடிவு ஆகியவற்றுகான தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிவார். இதனையடுத்து, இவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என கோருவார்.
அது மட்டுமல்லாமல், 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்தச் சட்டமுன்வடிவு, 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் திருத்தச் சட்டமுன்வடிவு, 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்டமுன்வடிவு, 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்டுப்புழு விதை உற்பத்தி, வழங்கல் மற்றும் விநியோகம் திருத்தச் சட்டமுன்வடிவு உள்பட 7 மசோதாக்கள் தாக்கல் செய்ய உள்ளன.
முன்னதாக, நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் முன்னாள் உறுப்பினர்கள் இ.ஏ.லியாவுதீன் சேட், கே.பழனியம்மாள், வெ.அ.ஆண்டமுத்து ஆகியோருக்கும், பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல், கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி, முன்னாள் தலைமைச் செயலாளர் ப.சபாநாயகம், சமீபத்தில் மறைந்த இந்திய வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது.
இதையும் படிங்க:காவிரி விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்! அதிமுக ஆதரவு.. பாஜக வெளிநடப்பு!