இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் விஞ்ஞானி டாக்டர் ஜெரோம், கரோனா வைரஸ் பரவல் இருக்கும் சூழ்நிலையில் பள்ளிகளை எப்போது திறக்கப்படும் என்பது குறித்த சிறப்பு பேட்டி பின்வருமாறு...
கேள்வி:தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா வைரஸ் கட்டுப்பாட்டில் உள்ளதா?
பதில்: கரோனா வைரஸ் தாக்குதல் ஆரம்பித்த காலகட்டத்தில் அவற்றின் வேகம் சில மாவட்டங்களில் அதிகமாக காணப்பட்டது. அப்பொழுது அரசு இயந்திரத்தை பயன்படுத்தி உடனடியாக அதை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டது. இன்றைய நிலையில், அந்த மாவட்டங்களில் கரோனா தொற்று குறைவாக காணப்படுகிறது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் கோயம்பேடு மூலம் நோய்த் தொற்று ஏற்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள். மீண்டும் அரசு முழு இயந்திரத்தை பயன்படுத்தி நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மக்களும் அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைத்து அரசு கூறும் அறிவுரைகளை பின்பற்றினால் சென்னையிலும் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்.
கேள்வி:பள்ளி, கல்லூரிகளை எப்போது திறக்கலாம்? என்ன மாதிரி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.
பதில்:உலக சுகாதார நிறுவனம் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை வழங்கியுள்ளன. அதை பின்பற்றி சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகள் தொடங்குவதற்கான முடிவை அரசுதான் எடுக்க வேண்டும். அப்பொழுது கரோனா தொற்று பாதிப்பு எந்த அளவு இருக்கிறதோ அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும்.பள்ளிகள் திறக்கும் போது கட்டாயமாக நோய்த் தொற்று பரவுவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளை சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்களின் உடல் வெப்பநிலையை தொடர்ந்து தெர்மல் ஸ்கேனர் மூலம் சோதனை செய்ய வேண்டும். பள்ளி, கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் ஆசிரியர்கள் இடையே கண்டிப்பாக தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
கேள்வி:சிறுவர்களிடம் தகுந்த இடைவெளி கடைபிடிக்க வலியுறுத்த முடியுமா?
பதில்:சீனா, தென் கொரியா போன்ற நாடுகளில் பள்ளி, கல்லூரிகள் திறந்து தகுந்த இடைவெளி கடைபிடிக்கப்படுகிறது. பள்ளி நிர்வாகம், பெற்றோர், மாணவர்கள் தரப்பிலிருந்து தகுந்த இடைவெளி கடைபிடிக்க முன்வரவேண்டும். பள்ளி சிறுவர்களிடம் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பதை தெரிவித்தால் எளிதாக கற்றுக் கொள்வார்கள். மேஜையில் மாணவர்களை அமரவைத்தல், சாப்பிடும்போது இடைவெளி, ஷிப்ட் முறையில் பள்ளியை நடத்துவது போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும்.மாணவர்களை அழைத்து வரும்பொழுதும் வீட்டில் விடும்பொழுதும் இடைவெளி கடைபிடிக்க வேண்டும். மாணவர்களுக்கு கரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால் பள்ளியை திறந்து நடத்தினாலும் நோய்த் தொற்று பரவாது என்பது சாத்தியம். இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: கேரளாவில் 10, 12ஆம் வகுப்பிற்கான தேர்வுகள் தொடக்கம்!