சென்னை:ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த மாவட்ட கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளில்,
'தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் விகிதத்தில் மாணவிகளைக் காட்டிலும், மாணவர்கள் விகிதம் அதிகமாக இருக்கிறது.
அந்த வகையில் கடந்த 2019-2020ஆம் கல்வியாண்டில் 9, 10ஆம் வகுப்பில் 6 விழுக்காடு மாணவிகளும், 13 விழுக்காடு மாணவர்களும் இடையில் நின்றுள்ளனர்.
மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பு:
பள்ளி மாணவர்களின் வாழும் சூழ்நிலை, பொருளாதார நிலை உள்ளிட்டவை இடைநிற்றலுக்கான காரணமாக இருப்பதாக கூறப்படுகின்றன. ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களின்படி தமிழ்நாட்டில் 1ஆம் வகுப்பில் 100 பேர் சேர்ந்தால் 68 பேர் மட்டுமே 12ஆம் வகுப்பு வரை செல்வதாக புள்ளிவிவரங்கள் குறிப்பிடுகின்றன.
உயர் நிலை, மேல்நிலை வகுப்புகளில் மாணவிகளைக் காட்டிலும் மாணவர்கள் இடைநிற்றல் அதிகரித்து மாணவிகள் கூடுதல் எண்ணிக்கையில் பயின்று வருவதும் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளன.
9, 10ஆம் வகுப்பில் மாணவர்கள் 81 விழுக்காடும், மாணவிகள் 83 விழுக்காடும் பயில்கின்றனர். 10, 12ஆம் வகுப்பில் மாணவர்கள் 61 விழுக்காடும், மாணவிகள் 75 விழுக்காடும் பயில்கின்றனர்.
மாணவர்கள் இடைநிற்றல்:
இது குறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் பேட்ரிக் ரெய்மண்ட் கூறும்போது, '2019-20ஆம் ஆண்டிற்கான பள்ளி மாணவர்களின் விவரங்கள் ஒன்றிய அரசின் கல்வித் தகவல் மேலாண்மையில் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் 9 முதல் 12ஆம் வகுப்பில் மாணவர்கள் இடைநிற்றல் அதிகளவில் உள்ளது. மாணவிகள் அதிகளவில் படிப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
மாணவர்களின் இடைநிற்றலுக்கான காரணம்:
அதே நேரத்தில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக காணப்படுவதற்கு அவர்களின் சமூகப் பொருளாதாரமும், குடும்பச் சூழ்நிலையும் காரணமாக உள்ளது. குடும்பத்திலுள்ள வருமானம் ஈட்டும் பெற்றோர்கள் இறக்கும்போது மாணவர்கள் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்படுகிறது.
இதுகுறித்து அரசு முழுமையாக புவியியல் அடிப்படையில் கணக்கிட்டு மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 8ஆம் வகுப்பு வரையில் உள்ளது.
இடைநிற்றல் குறித்து விளக்கும் பேட்ரிக் ரெய்மண்ட் அதனை 12ஆம் வகுப்பு வரையில் நீடிக்க வேண்டும். தற்போது ஒன்றிய அரசும், தமிழ்நாடு அரசும் அதனை நீட்டிப்பதற்கு அறிவித்துள்ளது. இது போன்ற நடவடிக்கையால் வரும் காலங்களில் மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் குறைய வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பா?