தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சத்து மாத்திரை சாப்பிடுவதில் போட்டி: ஊட்டியில் பள்ளி மாணவி பலி; ஆசிரியர்கள் சஸ்பெண்ட்!

உதகை உருது பள்ளியில் போட்டி போட்டுக்கொண்டு அதிக அளவில் சத்து மாத்திரை சாப்பிட்ட நான்கு மாணவிகளில் ஒரு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Etv Bharat

By

Published : Mar 10, 2023, 7:51 AM IST

நீலகிரி:உதகை காந்தல் பகுதியில், நகராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஊட்டச்சத்து மாத்திரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாத்திரைகள் ஒருநாளைக்கு ஒன்று என்ற அடிப்படையில், மருத்துவ மேற்பார்வையாளர் அல்லது பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 6ஆம் தேதி அன்று, இந்த மாத்திரை பள்ளி மாணவர்கள் கையில் கிடைத்துள்ளது. அப்போது யார் அதிகம் மாத்திரை உட்கொள்வது என அவர்களுக்குள் போட்டி ஏற்பட்டதாக தெரிகிறது.

இதில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் உட்கொண்டதால், 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவர், 7ஆம் வகுப்பு மாணவர் மற்றும் எட்டாம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாணவர்கள் உதகை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், 4 மாணவிகளின் உடல்நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்கள் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதில் ஒரு மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதால், அவர் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அனுப்பப்பட்டார். ஆனால் சிகிச்சைக்கு செல்லும் வழியில் சேலம் அருகில் பரிதாபமாக அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உதகை மேற்கு காவல் ஆய்வாளர் மீனா பிரியா தலைமையிலான போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில், "குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மாத்திரைகள் வாரம் ஒருமுறை சாப்பாட்டுக்கு பின் வழங்க வேண்டும். அதுவும், அதற்கென நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் மேற்பார்வையில் தான் குழந்தைகளுக்கு வழங்கப்படும். ஆனால் எப்படி இவ்வளவு மாத்திரைகள் குழந்தைகளின் கைகளுக்குச் சென்றது எனத் தெரியவில்லை. ஆசிரியர்களின் மெத்தன போக்குதான் இதற்கு காரணம். இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் சார்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

இதனிடையே நகராட்சி உருது பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை விநியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இதில் சம்பவம் நடந்த 6ஆம் தேதி அன்று கலைவாணி பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. ஆகையால், பீரோவில் இருந்த மாத்திரைகளை மாணவிகள் எடுத்து உண்டார்களா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: ரவுடி சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச்சூடு: விசாரணை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு!

ABOUT THE AUTHOR

...view details