சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் 23 வகை சான்றிதழ்களை இணையதளம் வழியாக வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும், எதிர்வரும் 2022 - 2023 கல்வியாண்டிற்கான நாள்காட்டியையும் அவர் வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், “1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன் 13 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். அதேபோல், ஜூன் 20 ஆம் தேதி 12 ஆம் வகுப்பிற்கும், ஜுன் 27 ஆம் தேதி 11 ஆம் வகுப்பிற்கும் வகுப்புகள் தொடங்கப்படும்.
மேலும், அடுத்த கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வுகள், அடுத்த ஆண்டு (2023) மார்ச் 13 ஆம் தேதி 12 ஆம் வகுப்பிற்கும், மார்ச் 14 ஆம் தேதி 11 ஆம் வகுப்பிற்கும், ஏப்ரல் 3 ஆம் தேதி பத்தாம் வகுப்பிற்கும் தொடங்கப்படும். மேலும், வருகின்ற கல்வியாண்டில் சனிக்கிழமைகளிலும் வகுப்புகளை நடத்த வேண்டிய தேவை உள்ளது. மாணவர்களுக்கு உரிய மனநல ஆலோசனைகள் பள்ளி துவங்கிய பின் வழங்கப்படும்.