தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மே 1 முதல் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வர தேவையில்லை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! - சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை: அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மே 1 ஆம் தேதி முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை எனவும், ஆனாலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தகவல் தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தொடர்ந்து கற்பிக்கும் செயல்பாட்டினை மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

Dpi
Dpi

By

Published : Apr 28, 2021, 4:55 PM IST

பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 2020-21 ஆம் கல்வி ஆண்டில் கோவிட் - 19 பெருந்தொற்று பரவல் காரணமாக 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வந்து கல்வி கற்கும் சூழல் தற்பொழுது வரை ஏற்படவில்லை. 9 முதல் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டு கோவிட்-19 நோய் தொற்று அதிகரித்ததால், 22.3.2021 முதல் பள்ளிகள் மூடப்பட்டன.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு செய்முறைத் தேர்வுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், 5. 5.2021 அன்று தொடங்க இருந்த 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கோவிட்-19 நோய் தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் பள்ளிக்கு நேரில் வர வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை, அவர்களை பொதுத் தேர்வுக்கு தொடர்ந்து தயார் செய்தல் வேண்டும். மேலும், ஏனைய வகுப்பு மாணவர்கள் கற்றல் இடைவெளியின்றி பயில்வதை உறுதி செய்யும் பொருட்டு பிரிட்ஜ் கோர்ஸ், செய்முறைப் புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி தொலைக்காட்சியில் தினசரி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

இந்நிலையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் வரும் 1. 5.2021 முதல் பள்ளிகளுக்கு வர தேவையில்லை. , 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தேதி குறித்து மறு அறிவிப்பு வரும் வரை அவர்களுக்கான வழிக்காட்டுதல்களை ஆசிரியர்கள் வீட்டில் இருந்தபடியே தொடர்ந்து வழங்கவும். மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பிரிட்ஜ் கோர்ஸ் மற்றும் செயல்முறை புத்தகத்தில் உள்ள பாடங்களை கல்வி தொலைக்காட்சி வாயிலாக கற்கவும், பயிற்சிகளை மேற்கொள்ளவும், வீட்டில் இருந்தபடியே ஆசிரியர்கள் தொடர்ந்து வழிக்காட்டுதல்களை வழங்கவும், இதற்காக மாணவர்கள் மற்றும் 'பெற்றோரிடம் உள்ள செல்போன், வாட்ஸ் அப் உள்ளிட்டவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த கல்வியாண்டுக்கு பள்ளிகளை தயார் செய்யும் , அதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்ளும் பொருட்டும், மாணவர்களுக்கான பயிற்சிகளை ஆய்வு செய்து அதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கும் பொருட்டும், 2021 மே மாத கடைசி வாரத்தில் ஆசிரியர்கள் பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டிய நிலை ஏற்படும் எனவும், இதற்கான அறிவிப்பு தனியே வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது என அதில் கூறியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details