தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம்; பள்ளிக்கல்வித்துறை விசாரணை - கோவை பள்ளி மாணவி

கோவையில் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்குள்ளான 17 வயது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறை விசாரணையை தொடங்கியது.

பள்ளிக்கல்வித்துறை விசாரணை
பள்ளிக்கல்வித்துறை விசாரணை

By

Published : Nov 15, 2021, 8:52 PM IST

சென்னை:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உக்கடம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்றுவந்த மாணவி ஆசிரியரின் பாலியல் தொல்லையால் (நவ.11) தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதனையடுத்து பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.

விசாரணையில், அந்த மாணவி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியால் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாகியதாகவும் பள்ளி நிர்வாகத்திடம் இதனைப் பற்றி புகார் தெரிவித்தும்கூட அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துகொண்டார் எனவும் தெரியவந்துள்ளது.

மிதுன் சக்கரவர்த்தி கைது

இதனையடுத்து (நவ.12) மாலை மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டுதல், போக்சோ சட்டத்தில் இரண்டு பிரிவுகள் என மொத்தம் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

இந்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த தனியார் பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் மீது போக்சோ சட்டப்பிரிவின்கீழ் வழக்குப்பதிந்தனர். இந்நிலையில், தனிப்படை காவல் துறையினர் பெங்களூருவில் வைத்து நேற்று (நவம்பர் 14) அவரைக் கைதுசெய்தனர்.

மீரா ஜாக்சன் சிறையில் அடைப்பு

இதனையடுத்து கோவை மகளிர் நீதிமன்றம் நீதிபதி நந்தினி தேவி முன்பு முன்னிறுத்தப்பட்ட மீரா ஜாக்சனை வரும் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் அவர் கோவை மத்திய சிறைச் சாலையில் அடைக்கப்பட்டார்.

பள்ளிக்கல்வித்துறை விசாரணை

கோயம்புத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் சம்மந்தப்பட்ட பள்ளியில் என்ன நடந்தது என்பது குறித்தும், பள்ளியின் கடந்த கால நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இன்று முதல் அவர்கள் விசாரணையை தொடங்கிய நிலையில், இந்த வார இறுதிக்குள் பள்ளிக்கல்வித்துறையிடம் அறிக்கை அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் மீண்டும் தலை தூக்கி இருப்பதன் காரணமாக, இது குறித்து கடும் நடவடிக்கை எடுப்பதற்காக முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் வரும் 23ஆம் தேதி கூட்டப்பட்டுள்ளது. இதில் 38 மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம்

மேலும் பள்ளிகளில் பாலியல் புகார்கள் குறித்து மாணவிகள் புகார் அளிப்பதற்கு வசதியாக பல்வேறு நடவடிக்கைகளை பள்ளி நிர்வாகங்கள் எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.

அதில் பள்ளிக்கு அருகில் உள்ள மகளிர் காவல் நிலைய தொலைபேசி எண்கள் குறித்த தகவல்கள் மாணவிகளுக்கு தெரியும் வகையில் வைப்பது, பாலியல் புகார் குறித்து புகார் அளிப்பதற்கான உதவி மைய எண்கள், மற்றும் புகார் பெட்டி வைப்பது உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை பள்ளிகள் சரிவர கடைபிடிப்பதில்லை என்பது பள்ளிக்கல்வித்துறைக்கு தெரியவந்துள்ளது. இது தொடர்பாகவும் முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க:coimbatore school girl death: நவ. 26 வரை மீரா ஜாக்சனுக்கு நீதிமன்றக் காவல்

ABOUT THE AUTHOR

...view details