சென்னை:தொடக்கக் கல்வித்துறை இயக்குனர் அறிவொளி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கல்விப் பணியில் முன்னேற்றம் காணும் வகையில் பள்ளிகள் இடையே போட்டி மனப்பான்மையினை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மாவட்டத்தில் 3 சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 2021-22ஆம் கல்வி ஆண்டில் 38 மாவட்டங்களுக்கு 3 சிறந்த பள்ளிகள் வீதம், 114 பள்ளியில் தேர்வு செய்யப்பட்டு தலைமை ஆசிரியர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.
அதன்படி, 2022-23ஆம் கல்வி ஆண்டில் ஒரு மாவட்டத்திற்கு மூன்று சிறந்த பள்ளிகளை தேர்வு செய்து சுழற்கேடயங்களை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளியின் செயல்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் பத்து மதிப்பெண்கள் விதம் 150 மதிப்பெண்கள் தரப்படும்.
பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் - பள்ளியில் 'எண்ணும் எழுத்தும்' இயக்கம் சிறப்பாக நடைபெறுதல் - மாணவர்களின் வாசித்தல், எழுதுதல், கணித திறன் சார்ந்த கற்றல் அடைவு திறன் - பள்ளியில் மாணவர் மைய கற்றலுக்கான சூழலுக்கு முக்கியத்துவம் தருதல் - மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகள் வளர்ப்பதில் முக்கியத்துவம் அளித்தல் - கற்றல் கற்பித்தலில் குறைந்தது ஐந்து புதிய உத்திகளை பயன்படுத்துதல் - மாணவர்களின் பன்முகத்தன்மை வெளிப்பட வாய்ப்பு வழங்குதல் - பள்ளியின் கட்டமைப்பு வசதி, பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிவறை, பள்ளி மேலாண்மை குழு உடன் இணைந்து பள்ளியின் வளர்ச்சியை மேம்படுத்துதல் உள்ளிட்ட 15 பிரிவுகளில் பள்ளிகளின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்படவுள்ளன.
கடந்த ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளை மீண்டும் தேர்வு செய்யக்கூடாது- அரசு, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் முதல் மூன்று இடங்களை பெறும் பள்ளிகளின் பட்டியலை எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காத வகையில் வரும் 26ஆம் தேதிக்குள் இயக்குனராகத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் வழங்கப்பட உள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனைகளில் ரூ.918 கோடியில் 106 புதிய அறிவிப்புகள்!