சென்னை: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பை மழைக் காலங்களில் உறுதிசெய்யத் தேவையான நடவடிக்கைகளை தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் எனப் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
கடலூரின் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வானதி ராயபுரம் தொடக்கப்பள்ளி திடீரென்று இடிந்து விழுந்தது. இந்நிலையிலேயே மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அடுத்து வரும் நாள்களிலும் தொடர்மழை வரும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து கல்வித் துறை அலுவலர்கள் ஆய்வுசெய்யவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆய்வுசெய்யப்பட வேண்டியவை
- தொடர் மழையின் காரணமாகப் பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவரிலிருந்து 20 அடி தூரம் வரை மாணவர்கள் யாரும் செல்லாத வகையில் தடுப்புகள் ஏற்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.
- மழையால் பாதிக்கப்பட்ட வகுப்பறைகள், இடிக்கப்பட வேண்டிய கட்டடங்களுக்குச் செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு வேலி அமைத்துக் கண்காணிக்க வேண்டும்.
- மின்கசிவு, மின்சுற்று கோளாறுகள் குறித்து ஆய்வுசெய்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால் மின் இணைப்பைத் தற்காலிகமாகத் துண்டித்துவைக்கலாம்.
- பள்ளி வளாகத்தில் உள்ள நீர்த்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டி, நீர்த்தேக்கத் தொட்டிகள் ஆகிய அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
- பள்ளி மாணவர்கள் விடுமுறை நாள்களில் ஏரி, குளம், ஆறுகளில் குளிப்பதைத் தவிர்த்திட அறிவுறுத்த வேண்டும். இது தொடர்பாக மாணவர்கள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
- ஆற்றில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடும் வழியினை, மழைக்காலங்களில் பள்ளிக்கு வந்துசெல்லும்போது பயன்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்த வேண்டும்.
- அறுந்துகிடக்கும் மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அதன் அருகில் செல்வதோ கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
- சாலையில் மழைநீர் கால்வாய்கள் இருக்கும் இடங்களில் கவனமாகச் செல்வதுடன், அதன் அருகில் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும்.
- பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருந்தால் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.
- பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர் மின் அழுத்தம் உள்ள மின் கம்பங்கள், அது தங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அதனை உடனடியாக அகற்ற வேண்டும்.
- மாணவர்களைக் கொண்டு மின் சாதனங்களைக் கண்டிப்பாக இயக்கக் கூடாது.
- பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டடங்களும் உறுதியாக உள்ளனவா என்பதை அவ்வப்போது ஆய்வுசெய்ய வேண்டும்.
- பருவகால மாற்றங்களால் மாணவர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களான டெங்கு, சிக்குன்குனியா காய்ச்சல் போன்றவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அறிவுரைகளை வழங்க வேண்டும்.
- பள்ளி வளாகத்தில் மாணவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் பள்ளி தலைமை ஆசிரியரால் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- மழைக்குப் பின்னர் பள்ளி திறப்பதற்கு முன் பள்ளி கட்டடத்தின் உறுதித்தன்மை ஆய்வுசெய்ய வேண்டும்.
இதையும் படிங்க:'சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கிடையாது; ஆனால்...' - பாலச்சந்திரன்