இதுகுறித்த திமுக தலைவர் ஸ்டாலினின் அறிக்கையில், “1921 கோடி ரூபாய் மதிப்பில் மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் பிரம்மாண்டமான ஊழலில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாணவ, மாணவியருக்கு 15.66 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்காக எல்காட் நிறுவனம் டெண்டர் விட்டுள்ளது. அந்த டெண்டரில் சீன நிறுவனம் ஒன்று பங்கேற்று - அந்நிறுவனத்திடம் இருந்து எப்படியும் மடிக்கணினிகள் வாங்குவதென்ற ஒரே உள்நோக்கத்துடன் நடைபெற்றுள்ள “ஊழல் திருவிளையாடல்கள்” பேரதிர்ச்சியளிக்கின்றன.
மடிக்கணினிகள் வழங்கும் திட்ட டெண்டரில் சீன நிறுவனம் பங்கேற்று, மடிக்கணினிகள் குறித்த இரு மாதிரிகளை (Model) அளித்து, அதன் சோதனை அறிக்கையையும் (Test Report) கொடுத்திருந்தது. ஆனால் இரு மாதிரி மடிக்கணினிகளுக்கும் ஒரே விலை என்று கூறியிருக்கிறது. இந்த டெஸ்ட் ரிப்போர்ட்டுகளை ஆய்வு செய்ததில் ஒரு மாடல் மடிக்கணினியின் செயல் திறனுக்கு 465 மதிப்பெண்களும், இன்னொரு மாடல் மடிக்கணினியின் செயல்திறனுக்கு 265 மதிப்பெண்களும் என இரு வேறு செயல்திறன் கொண்டதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகவே, இரு மாடல்களில் ஒன்று தரம் குறைந்தவை என்று தெரியவந்தது. ஒரு மாடல் குறைந்த செயல்திறனே உள்ள மடிக்கணினி என்று அந்நிறுவனம் அளித்த டெஸ்ட் அறிக்கையிலேயே வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுவிட்டது. ஆனால் அமைச்சர், தகவல் தொழில்நுட்ப செயலாளர், எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எல்லாம் கூட்டுச் சேர்ந்து சீன நிறுவனத்திற்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறார்கள். விளைவு; குறைந்த செயல் திறன் கொண்ட மடிக்கணினியை விநியோகம் செய்ய உத்தரவு கொடுத்துள்ளனர். இதன் மூலம் ஒரு மடிக்கணினிக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் ரூ.469 கோடி எல்காட் நிறுவனம் உழல் செய்துள்ளது.
மடிக்கணினி முறைகேடு இத்துடன் நின்றுவிடவில்லை. எதிர்காலத் தொழில் நுட்பத்தைக் கருத்தில் கொண்டு மடிக்கணினியில் ‘மெமரி 4 ஜி.பி.யிலிருந்து 8 ஜி.பி.யாக’ அதிகரிக்கும் வசதி இருக்க வேண்டும் என்று டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக 4 ஜி.பி. சேர்க்கப்பட்டால் மாணவ, மாணவியர் புதிய மடிக்கணினி வாங்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சீன நிறுவனம் வழங்கிய மடிக்கணினியில் இந்த வசதியும் இல்லை.