சென்னை ஐஐடியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் தற்கொலை செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. ஐஐடியில் மத்திய அரசின் இடஒதுக்கீட்டு அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை, மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுவதில்லை என்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது.
இதுகுறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட புகாரினைத் தொடர்ந்து அதன் உறுப்பினர் சுஷ்மா வித்வான் சென்னை ஐஐடியில் விசாரணை மேற்கொள்கிறார். அப்போது ஐஐடி நிர்வாகத்தில் உள்ள முக்கிய அலுவலர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது. ஏற்கெனவே ஐஐடி பதிவாளர் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் இன்று மீண்டும் விசாரணையை தீவிரமாக மேற்கொள்ள வருகிறார்.