தமிழ்நாட்டில் சென்னை-சேலம் இடையே எட்டு வழிச் சாலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி பாமக இளைஞரணித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
பல ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 274 கிலோமீட்டர் தொலைவில் உருவாகும் இந்தத் திட்டத்தால் தமிழ்நாட்டிலுள்ள சில மாவட்ட விவசாயிகள் பெரிதும் பாதிப்படைவதோடு, சுற்றுச் சூழல் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கிடையில், இந்தத் திட்டம் நாட்டின் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான முக்கியத் திட்டம் என நெடுஞ்சாலைத் துறை வாதிட்டது.