சென்னை:தமிழ்நாட்டில் பல்வேறு வகையான ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அரங்கேறிவருகின்றன. காவல் துறையினரும் அவற்றைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகின்றனர்.
சைபர் குற்றங்களின் தலைநகரம்
சைபர் குற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர், பெரும்பாலும் குற்றவாளிகளைத் தேடிச் செல்லும் இடம் ராஜஸ்தான், ஜார்கண்ட், ஹரியானா மாநிலங்கள்தான்.
வங்கி மேலாளர்போல பேசி மோசடி செய்வது, கிரெடிட், டெபிட் கார்டு மோசடி, போலி ஃபேஸ்புக் கணக்கு மூலம் மோசடி எனப் பல்வேறுவிதமான இணைய வழி மோசடிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கும், கொள்ளையர்களின் தலைநகரமாக இரண்டு இடங்கள் செயல்படுகின்றன. ஒன்று ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா நகரம்; மற்றொன்று ஹரியானா மாநிலத்தின் மேவாட் மாவட்டம்.
சைபர் குற்றத்திற்கு பயிற்சி
இந்தியா மட்டுமல்லாமல், சர்வதேச அளவில் நடைபெறும் சைபர் குற்றங்கள் தொடர்புடைய இந்த இரண்டு இடங்களில், மாட்டிக்கொள்ளாமல், ஆன்லைன் மூலமாகக் குற்றங்கள் செய்வதற்கான பயிற்சி மையங்கள் செயல்படுகின்றன. அங்கு வேலை கிடைக்காத படித்த இளைஞர்கள், இதுபோன்ற சைபர் குற்றச்செயல்களில் இறங்கியுள்ளனர்.
இந்தக் குற்றவாளிகளைப் பற்றி விசாரிக்கவோ அல்லது கைதுசெய்யவோ, காவல் துறையினர் சாதாரணமாக அந்த ஊர்களுக்குள் நுழைந்துவிட முடியாது. சைபர் குற்றங்களுக்குக் கூடாரமான மேவாட், ஜம்தாராவை சேர்ந்த சைபர் குற்றவாளிகளை, அம்மாவட்ட காவல் துறையினரால் கட்டுப்படுத்த முடியாததால், ஒன்றிய உள் துறை அமைச்சகம் நேரடியாகத் தலையிட்டு, சைபர் குற்றங்களைக் குறைக்க, ஜார்கண்ட், ஹரியானா காவல் துறையில் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸை உருவாக்கி கண்காணித்துவருகின்றது.
மேவாட்டில் பதுங்கிய குற்றவாளிகள்
பல்வேறு மாநிலங்களில் சைபர் குற்றங்களை அரங்கேற்றிவிட்டு, இந்த ஊர்களில் பதுங்கிக்கொள்வதை கொள்ளையர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தற்போது எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களில் நூதன முறையில் கொள்ளையடித்த கும்பல் மேவாட் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதை சென்னை தனிப்படை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.