சென்னை: கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வாக்குச் செலுத்த வருபவர்களுக்கு கையுறை வழங்கபடும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு, வரும் 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதியில்லை என்றும் தெரிவித்தார்.
கடந்த தேர்தல்களில் இருந்த 68,324 வாக்கு பதிவு மையங்கள் தற்போது, கரோனா தொற்று காரணமாக 88,937 வாக்கு பதிவு மையங்களாக உயர்த்தப்பட்டிருப்பதாகவும், 4 லட்சத்து 79 ஆயிரத்து 892 ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், தேர்தல் விதிமீறல் குறித்த புகார்களை இலவச தொலைபேசி எண்களான 1950, 180042521950 ஆகிய எண்கனை தொடர்புகொண்டு தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
நட்சத்திர பரப்புரை
வாக்கு செலுத்த செல்வோர், ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட 11 வகையான அடையாள அட்டையை காண்பித்து வாக்கச் செலுத்தலாம் எனத் தெரிவித்த அவர், அரசியல் கட்சியினர் வேட்பாளருக்கு ஆதரவாக நட்சத்திரப் பரப்புரை செய்ய வருவோருக்கான அனுமதி கடிதத்தை 22ஆம் தேதிக்குள் கொடுக்க வேண்டும் என்றார். வருகின்ற 16ஆம் தேதி தேர்தல் பொதுப் பார்வையாளர் 150 பேரும், 19ஆம் தேதி முதல் காவல்துறை பார்வையாளர்கள் 40 பேரும், செலவின பார்வையாளர்கள் வருகின்ற 12ஆம் தேதி முதலும் தங்கள் தேர்தல் பணிகளைத் தொடங்குகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.