சென்னை:தமிழ்நாட்டில் கரோனா பரிசோதனை மேற்கொண்டால் முடிவுகள் வர மூன்று நாள்கள் ஆகின்றன. வீடு வீடாக சென்று கரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "கடந்த ஆட்சி காலத்தில் காவேரி - குண்டாறு இணைப்பு திட்டத்தின் பணிகளை தொடங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தோம். இதுகுறித்து, தற்போதுகூட பிரதமருக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் இதற்கான அனுமதியை மத்திய அரசு சார்பாக வழங்கப்பட இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது மகிழ்ச்சி அளித்துள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 6,900 நபர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அப்போது, தமிழ்நாட்டில் 257 கரோனா பரிசோதனை மையங்கள் இருந்த நிலையில் தற்போது 259 மட்டுமே மையங்களே உள்ளன. இதனால் கரோனா பரிசோதனை செய்த நபர்கள் முடிவுகளை தெரிந்துகொள்ள மூன்று நாள்கள் ஆகின்றன. இதனால் பாதிப்பு அதிகரிக்கிறது" என்றார்.
'சசிகலா அமமுக தொண்டர்களிடம்தான் பேசுகிறார்'- எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தனியாக அறிக்கை வெளியிடுவது, தற்போது தனியாக ஆலோசனை நடத்துவது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அரசியல் குறித்து எதிர்க்கட்சி தலைவராக நான் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறேன். அரசியல் குறித்து அவர் எழுதுகிறார். இன்று அவர் வீட்டில் புதுமனைப் புகுவிழா என்பதால், கூட்டத்திற்கு வரவில்லை. இன்று நல்ல நாள் என்பதற்காக கட்சி அலுவலகத்திற்கு நான் வந்ததேன். எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவில்லை" என்றார்.
மேலும், சசிகலாவின் ஆடியோ குறித்து பேசிய அவர், “சசிகலா கட்சியில் உறுப்பினராககூட இல்லை, அவர் அரசியலிலிருந்து ஒதுங்குவதாக கடந்த தேர்தலின் போதே தெரிவித்து விட்டார். இப்போது திட்டமிட்டு வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்துவதற்காக இது போன்ற செயலில் ஈடுபடுகின்றனர்.
அவர் தொடர்ந்து பேசி வருவது அதிமுக தொண்டர்களிடம் அல்ல, அமமுக தொண்டர்களிடம்தான். நான் ஏற்கெனவே டெல்லியில் கூறியது போல சசிகலாவிற்கும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கும் அதிமுகவில் இடமில்லை. இதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பமாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க:சசிகலா செல்போன் அழைப்பால் உற்சாகமான தொண்டர்!