சென்னை: வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரியில் உலக வெறிநாய் கடி தடுப்பு தினத்தை முன்னிட்டு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று (செப். 29) நடைபெற்றது. இதை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தொடங்கிவைத்தார்.
இதில் மருத்துவர் ராணி கவுர் பானர்ஜி, தமிழ்நாடு கால்நடை மற்றும் அறிவியில் பல்கலைக்கழக துணைவேந்தர் மருத்துவர் செல்வக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும்
நிகழ்ச்சியில் பேசிய சஞ்ஜிப் பானர்ஜி, "சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட போது, நானும் எனது மனைவியும் கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு ஜனவரி மாதம் சாலை வழியாக வந்தோம். நாங்கள் வளர்த்த செல்லப்பிராணியையும் எங்களுடன் கொண்டு வந்தோம்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி குழந்தை போன்று நாங்கள் வளர்த்த வந்த செல்லப்பிராணியான நாய், சென்னை கொண்டு வந்த ஓரிரு நாள்களில் அதன் 13ஆவது வயதில் உயிரிழந்தது என்று கூறி கண்கலங்கினார்.
எங்களது நாய் இறந்த பிறகு நிறைய நபர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதற்கு கொடுத்தனர், இருந்தும் அவற்றை நாங்கள் வளர்க்காமல் தெருவோர நாய்களை பராமரித்து வருகிறோம்.
படித்தவர்கள் தெருவோர நாய்களை பாதுகாக்க முன்வர வேண்டும். விலங்குகள் நம்மிடம் அன்பை எதிர்பார்க்கின்றது, ஆனால் அதை நாம் புரிந்துகொள்வதில்லை. வெறிநாய் கடி நோய் குறித்து ஒருசிலருக்கு அச்சம் உள்ளது. அதுதொடர்பான புரளிகளை புறக்கணித்துவிட்டு, அதன் உண்மைகளை மக்கள் உணர வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழை முன் எச்சரிக்கை பணிகள்... ஐஏஎஸ் அலுவலர்கள் நியமனம்