சென்னை: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் நேற்று (செப்.2) சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் பேசிய உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை டெங்கு, மலேரியா, கரோனா போன்ற நோய்களுடன் ஒப்பிட்டிருந்தார்.
இந்த நோய்களை ஒழித்துக்கட்டியதுபோலவே, சனாதனத்தையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கூறினார். சனாதனத்தை எதிர்ப்பதைவிட, அதை ஒழிப்பதுதான் நல்லது என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு தற்போது பேசுபொருளாகியுள்ளது. சனாதனம் தொடர்பான உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பாஜக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவரது X சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்த கண்டனப் பதிவில், “மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைத் தாண்டிச் செல்வத்தைக் குவிப்பதுதான் கோபாலபுரம் குடும்பத்தின் ஒரே நோக்கம். உதயநிதி ஸ்டாலின் அவர்களே நீங்கள், உங்கள் தந்தை அல்லது உங்கள் லட்சியவாதிகளான கிறிஸ்தவ மிஷனரிகளுடைய கொள்கையைக் கொண்டுள்ளீர்கள்.
அந்த மிஷனரிகளின் எண்ணம், உங்களைப் போன்றவர்கள் மூலமாக தங்களது தீய சித்தாந்தத்தை வளர்க்க வேண்டும் என்பதுதான். தமிழ்நாடு ஆன்மிக பூமி. உங்களால் இது போன்ற நிகழ்வில் மைக்கைப் பிடித்து உங்கள் விரக்தியை வெளிப்படுத்த மட்டுமே முடியும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா, “சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம், நாட்டில் சனாதன தர்மத்தைப் பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுக்கிறார்” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் அவரது X சமூக வலைத்தள பக்கத்தில், “சவால்களை சட்டரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறேன். இதுபோன்ற காவிகளின் மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். பெரியார், அண்ணா, கருணாநிதி போன்றவர்களை பின்பற்றுபவர்கள் நாங்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின் கீழ் சமூக நீதியை நிலைநாட்டவும், சமத்துவ சமுதாயத்தை நிலைநாட்டவும் போராடுவோம். திராவிட மண்ணில் இருந்து சனாதனத்தை ஒழிக்க வேண்டும்.
சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என நான் ஒருபோதும் கூறவில்லை. சனாதன தர்மம் என்பது சாதி மற்றும் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கும் கொள்கை. சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்குவது என்பது மனித நேயத்தையும், சமத்துவத்தையும் நிலைநிறுத்துவதாகும். நான் பேசிய ஒவ்வொரு வார்த்தையிலும் நான் உறுதியாக நிற்கிறேன். சனாதன தர்மத்தால் பாதிக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் சார்பாக நான் பேசினேன்.
சனாதன தர்மம் மற்றும் சமூகத்தில் அதன் எதிர்மறையான தாக்கம் குறித்து ஆழமான ஆய்வுகளை மேற்கொண்ட பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் எழுத்துக்களை எந்த மன்றத்திலும் சமர்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். எனது உரையின் முக்கிய அம்சத்தை மீண்டும் வலியுறுத்துகிறேன். கொசுக்களால் டெங்கு, மலேரியா, கரோனா போன்ற நோய்கள் பரவுவதுபோல, பல சமூக சீர்கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம் என்று நான் நம்புகிறேன். நீதிமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் நீதிமன்றமாக இருந்தாலும் சரி, எனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். பொய்யான செய்திகளை பரப்புவதை நிறுத்துங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: வாக்கு வங்கிக்காக மட்டுமே ‘சனாதான தர்மம்’.. உதயநிதி ஸ்டாலினுக்கு அமித்ஷா எதிர்ப்பு!