தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Asian hockey championship: வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி உறுதி - chennai Asian hockey championship

சென்னையில் நடக்கும் ஆசிய அளவிலான ஹாக்கி விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வரும் சர்வதேச வீரர்களுக்கான அனைத்து வசதிகளும், பாதுகாப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 2, 2023, 7:33 PM IST

வீரர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் - அமைச்சர் உதயநிதி உறுதி

சென்னை:7வது ஆசிய ஆடவர் ஹாக்கி போட்டி (Asian hockey championship), நாளை முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை இந்தியா அரசின் ஹாக்கி அணியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் ஹாக்கி போட்டி நடைபெறுவதால் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.

ஆசியன் ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் கோப்பை கன்னியாகுமரியில் இருந்து அனைத்து மாவட்டங்களின் வழியாக சென்னைக்கு எடுத்து வரப்பட்டது. போட்டிகள் நாளை (ஆகஸ்ட் 03) தொடங்கவுள்ள நிலையில், அது தொடர்பாக மேயர் ராதாகிருஷ்ணன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இந்திய ஹாக்கி தலைவர் டாக்டர் திலீப் திர்கி ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

இதில் பேசிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் போட்டி சென்னையில் நடைபெறுவது தமிழர்களாகிய நாம் அனைவருக்கும் பெருமை. இந்தப் போட்டிக்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் 16 கோடி ரூபாய் செலவில், மேயர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மைதானம் புனரமைப்புப் பணிகள் நடைபெற்று முடிக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியை சிறப்பாக நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு நிதியில் இருந்து 17 கோடி ரூபாய் ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கேற்க வருகின்ற சர்வதேச ஹாக்கி வீரர்கள் தங்கும் விடுதிகள், உணவு, போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன" என்று கூறினார்.

மேலும் சர்வதேச தரத்தில் மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது என்றும்; தமிழகத்தில் இந்தப் போட்டிகளை தொடர்ந்து முதலமைச்சர் கோப்பை என்று பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது என்றும்; குறிப்பாக அனைத்து விளையாட்டுகளுக்கும் வீரர்களை ஊக்குவித்து வருவதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "பாகிஸ்தான் அணி வீரர்கள் உட்பட அனைத்து அணி வீரர்களுக்குமான பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். சென்னையில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களை ஹாக்கி போட்டியை காண அழைத்து வர இருக்கிறோம். அதோடு அனைத்து சட்டமன்றம், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் குறைந்தது அவர்கள் தொகுதியில் இருந்து 100 குழந்தைகளை அழைத்து வருமாறு அறிவுறுத்தி உள்ளோம்" என்று கூறினார்.

ஐபிஎல் ஃபேன் பார்க் (IPL fan park) போன்று தமிழகம் முழுவதும் 40 இடங்களில் போட்டிகளைக் காண ஏற்பாடு செய்யப்பட்டு, அதை விழிப்புணர்வு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்; அவற்றில் இலவசமாக பொதுமக்கள் போட்டிகளை கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், "தற்போது வரை 70 சதவீத டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. போட்டியைப் பார்க்க ஆர்வமுள்ள அனைத்து மாணவர்களுக்கும், உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கும் போட்டியைக் காண அனுமதி இலவசம். இந்த விளையாட்டு மைதானத்தைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது சமூக விரோதிகளின் தவறுகள் முற்றிலும் தவிர்க்கப்படும்" என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜல்லிக்கட்டு காளை மரணம் - துக்கம் அனுசரித்த கிராம மக்கள்!

ABOUT THE AUTHOR

...view details