சென்னை: சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார், மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி கடிதம் அனுப்பி இருந்தார்.
இந்த நிலையில் எஸ்.சி. பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி விளக்கத்தை அளித்தார், ரூபி மனோகரன் கடிதம் வாயிலாக 2 வாரம் கால அவகாசம் கேட்டிருந்தார். இந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் ராமசாமி, "ரூபி மனோகரன் கேட்டிருந்த கால அவகாசம் ஏற்றத்தக்கதாக இல்லை என இக்குழு முடிவு செய்துள்ளது. அவர் குழுவிற்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். அதுவரை காங்கிரஸ் கட்சியிலிருந்து அவரை தற்காலிகமாக நீக்கம் செய்கிறோம்" எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், "சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு கடிதம் அனுப்பியிருந்தது. இந்நிலையில் கால அவகாசம் கேட்டு தாங்கள் அனுப்பிய கடிதத்தை படித்தோம். அதில் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் ஏற்கக்கூடியது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவெடுத்துள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும். அதுவரை தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தங்களை தற்காலிகமாக நீக்கம் செய்கிறது" என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி பறிபோகுமா?