தமிழ்நாடு தகவல் அறியும் சமூக ஆர்வலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் தேவேந்திரன், தனது நண்பர்களுடன் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று (மே 24) அம்பத்தூர் வானகரம் மெயின் ரோட்டிலுள்ள டன்லப் மைதானத்தில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அம்பத்தூர் மதுவிலக்குப் பிரிவு உதவி ஆய்வாளர் நாதமுனி, திடீரென அவர்களை சோதனை செய்துள்ளார். எதற்காக சோதனை செய்கிறீர்கள் என அந்த ஐந்து பேரும் கேட்டதற்கு சட்டவிரோதமாக இங்கு மதுவிற்கப்படுவதாக தகவல் வந்ததன் பேரில் சோதனை நடத்துவதாக அந்த உதவி ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
அந்தசோதனையின்போது அவர்களிடமிருந்து எந்த மதுபாட்டில்களும் கைப்பற்றப்படவில்லை என்று தெரிகிறது. இந்த சோதனைக்காக தங்களிடம் உதவி ஆய்வாளர் நாதமுனி மன்னிப்பு கேட்கவேண்டும் என பேசி கடந்த 26ஆம் தேதி தேவேந்திரன் ஆடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த ஆடியோவில், "அம்பத்தூர் காவல் துறையைச் சேரந்த சிலர், கொலையை தற்கொலையாக மாற்றி பணம் சம்பாதிக்கிறார்கள். குற்றப்பிரிவில் உள்ள காவலர்கள் திருடர்களிடமிருந்து பணம் பறிக்கின்றனர். மதுவிலக்குப் பிரிவில் பணிபுரியும் காவலர்களில் சிலர், மதுக்கடையில் மதுபானங்களை கொள்ளையடிக்கும் நபர்களிடமிருந்து மதுபானங்களை பங்கு பிரிக்கும் செயலில் ஈடுபடுகிறார்கள்" என்று பேசியிருந்தார்.