தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரிய வழக்கு - தீர்ப்பு ஒத்திவைப்பு! - சென்னை உயர்நீதிமன்றம்

எல்லா மத நம்பிக்கையையும் பாதுகாத்து, தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக நீடிக்க அரசு விரும்புவதாகவும், ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்புக்கு அனுமதி கோரி மீண்டும் விண்ணப்பித்தால் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

RSS
RSS

By

Published : Jan 24, 2023, 7:58 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதியளிக்க பிறப்பித்த உத்தரவை காவல்துறை அமல்படுத்தவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதியளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ். சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது ஆர்.எஸ்.எஸ். தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஏற்கனவே அணிவகுப்புக்கு அனுமதியளித்த உத்தரவை மாற்றியமைத்து, சுற்றுச்சுவருடன் கூடிய மைதானத்தில் நடத்த உத்தரவிட்டது தவறு என்பதால், இந்த மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு உகந்ததுதான் என வாதிடப்பட்டது.

பி.எப்.ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையைக் காரணம் காட்டி, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என எந்த ஆதாரங்களும் இல்லாமல் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதே காலகட்டத்தில் பிற அமைப்புகள் 500 இடங்களில் போராட்டம் நடத்த அனுமதியளித்தது பாரபட்சமானது என்றும் வாதிடப்பட்டது.

ஒருபுறம் அமைதிப் பூங்கா எனக் கூறிவிட்டு, இன்னொருபுறம் சட்டம் ஒழுங்கு பிரச்னை என அனுமதி மறுப்பதாகவும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு மற்றும் காவல் துறை தரப்பில், சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசின் கடமை தான் எனவும், அதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் அடங்கும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. 500 இடங்களில் போராட்டங்களுக்குதான் அனுமதியளிக்கப்பட்டதே தவிர அணிவகுப்புக்கு அல்ல எனவும், வால்பாறை தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள் ஊர்வலத்துக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்தும், பி.எப்.ஐ. தடைக்கு பின்னும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரின் பாதுகாப்புக்காக 50 ஆயிரம் போலீசார் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தடுக்கவே அரசு முயற்சித்ததாகவும், உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் காவல் துறையினர் செயல்பட்டதாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

எல்லா மத நம்பிக்கையையும் பாதுகாத்து, தமிழ்நாடு அமைதி பூங்காவாக நீடிக்கவே அரசு விரும்புவதாகவும், அணிவகுப்புக்கு அனுமதி கோரி முறையாக விண்ணப்பித்தால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், தனிப்பட்ட முறையில் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளை பிறப்பிப்பர் என்றும் தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை:தமிழ்நாடு அலங்கார ஊர்திக்கு அனுமதி - பெண்களுக்கே முக்கியத்துவம்!

ABOUT THE AUTHOR

...view details