தமிழ்நாடு அரசின் 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில், "இந்து மகா சபா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு இஸ்லாமியர்களுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தன" என்ற கருத்தை நீக்கக் கோரி, ஆர்எஸ்எஸ் நிர்வாகி தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், குறிப்பிட்ட கருத்து மறைக்கப்பட்டதாகவும், அடுத்த கல்வியாண்டில் அது குறித்த கருத்து நீக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, தனி நீதிபதி முன்னிலையில் இது குறித்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் கருத்து பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தந்தை பெரியார் திராவிடர் கழக துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞருமான துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதில், 'உண்மை வரலாற்றை மறைக்கும் வகையில் பாடப் புத்தகத்தில் உள்ள கருத்தை நீக்க மாநில கல்வித்துறை, சட்டவிரோதமாக உத்தரவிட்டுள்ளது.
பாடப்புத்தகத்தை ஒருங்கிணைத்த குழுவிடம் முறையாக, அனுமதி பெறாமல் தன்னிச்சையாக ஆர்எஸ்எஸ் குறித்த கருத்தை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2006ஆம் ஆண்டு நீதிக்கட்சி குறித்து வெளியான பாடப்புத்தகப் பதிவில் "பிராமணர்களுக்கு" எதிரான கருத்தை நீக்கினால், வரலாறு மாற்றப்படும் என பாடப் புத்தகங்கள் ஒருங்கிணைப்பு தலைமைக்குழு மறுத்துவிட்டது.
மகாத்மா காந்தி, ஆர்எஸ்எஸ் தொண்டர் நாதுராம் விநாயக் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், குஜராத் மாநில பாடப் புத்தகத்தில், காந்தி விபத்தில் மரணமடைந்ததாகக் குறிப்பிடப்பட்டு வரலாறு திரிக்கப்பட்டுள்ளது.