சென்னை:இது குறித்து உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர், பதிவாளர்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், கல்லூரி கல்வி இயக்ககம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, "தொழில் நுட்பக் கல்வி, கலை மற்றும் அறிவியல் கல்வி இளநிலை பயிலும் மாணவிகளுக்கான மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தும் பொருட்டு பின்வரும் வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஏதுவாக https://penkalvi.tn.gov.in என்ற முகவரியில் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் இந்தத் திட்டத்தில் பயன்பெறும் மாணவிகளின் விவரங்களை ஜூன் 25ஆம் தேதி முதல் ஜூன் 30ஆம் தேதிக்குள் சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உடனடியாக அந்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று அரசு, அரசு உதவி பெறும், சுயநிதிக் கல்லூரிகள், நிகர் நிலைப் பல்கலைக்கழகங்களில் உயர்கல்வியைத் தொடரும் மாணவிகள் இந்தத் திட்டத்தில் பயன்பெறுவர்.
தேவையான ஆவணங்கள்:இந்தத் திட்டத்துக்கென இளநிலை பயிலும் மாணவிகளிடமிருந்து அவர்களது சுய விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பயின்ற அரசுப் பள்ளி விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மாணவிகள் ஆதார் நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச்சான்றிதழ் நகல் ஆகிய ஆவணங்களின் நகல்களைக் கொண்டு வர அறிவுறுத்த வேண்டும்.