சென்னை: கல்லூரி மாணவர்கள் இடையே ரூட்டு தல விவகாரத்தில், ரயில் நிலையங்களில் பொன்ற பொது இடங்களில் தொடர்ச்சியாக மோதல் சம்பவம் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் பெரம்பூர் லோகோ ரயில் நிலையத்தில் மாநிலக் கல்லூரி மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் மாறி மாறி கற்களைக் கொண்டு தாக்கிக் கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மேலும், அண்மையில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு மாணவரைக் கத்தியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய மாநிலக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில், கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பாக, 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 44 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: துபாயில் இருந்து சென்னைக்கு தங்கம் கடத்தல்! ஷூக்குள் வைத்து 2 கிலோ தங்கம் கடத்த முயற்சி! ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 3 பேர் கைது!
இது தொடர்பாக மாநிலக் கல்லூரி முதல்வருக்கு ரயில்வே போலீசார் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர். அதன் அடிப்படையில் 25 மாணவர்களை மாநிலக் கல்லூரியின் முதல்வர் இடை நீக்கம் செய்து உத்தரவிட்டு உள்ளார். மேலும் ரயில் நிலையங்களில் மோதலில் ஈடுபட்டும் சுமார் 30 மாணவர்களை நிரந்தரமாகக் கல்லூரியிலிருந்து நீக்க வேண்டும் என ரயில்வே போலீசார் மீண்டும் கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில், கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக ரூட்டு தல பிரச்சனைகளில் ஈடுபட்டு வருவதால், ரயில்வே போலீஸார் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, அறிவுரை வழங்கப்பட்டு வருவதாக ரயில்வே போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும் கல்லூரி மாணவர்கள் இடையே ஏற்படும் மோதல்களைத் தடுக்கும் நடவடிக்கைகளாக, மாணவர்கள் பயணம் செய்யும் ரயில் பெட்டிகளில், அவர்களுடன் ரயில்வே போலீசாரும் பயணித்து மோதலில் ஈடுபடுகிறவர்களை எனக் கண்காணிக்கவும், ரயில் நிலையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஒரே நாளில் 13 இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்; தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அதிரடி!