சென்னை அயனாவரத்தில் கொலை உள்ளிட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடி சங்கர் தலைமறைவாக இருந்த நிலையில், கஞ்சா வழக்கு தொடர்பான விசாரணையின்போது, அவர் சென்னை புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருப்பதாக அயனாவரம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து அங்கு சென்ற காவலர்கள் சங்கரை கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அயனாவரம் பகுதியில் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பதாகத் தெரிவித்தார். இதனையடுத்து கஞ்சாவைப் பறிமுதல்செய்வதற்காக நியூ ஆவடி சாலை அருகே வந்துகொண்டிருந்தபோது, புதர் ஒன்றில் அருகே கஞ்சாவை பதுக்கிவைத்திருப்பதாக சங்கர் கூறியுள்ளார்.
அந்தப் பகுதியில் காவல் துறையினர் சங்கரை இறக்கி சோதனை நடத்தியதில் திடீரென புதருக்குள் இருந்த கத்தியை எடுத்த சங்கர், முபாரக் என்ற காவலரை வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனிருந்த காவல் ஆய்வாளர் நடராஜ், தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் சங்கரை சுட்டார். அதில் சங்கர் உயிரிழந்தார். அதையடுத்து சங்கரின் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டது. காவலர் முபாரக் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் காயமடைந்த காவலர் முபராக்கை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான சங்கர் மீது மூன்று கொலை வழக்குகள், நான்கு கொலை முயற்சி உள்பட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.