தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெருங்களத்தூரில் திருட்டு மற்றும் கொலை - அதிர்ச்சியில் பொதுமக்கள் - Robbery and murder incidents on same day

chennai crime news: பெருங்களத்தூர் பகுதியில் ஒரே நாளில் நடைபெற்ற இரு வேறு குற்ற சம்பவங்களால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

பெருங்களத்தூரில் திருட்டு மற்றும் கொலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்
பெருங்களத்தூரில் திருட்டு மற்றும் கொலை - அதிர்ச்சியில் பொதுமக்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 17, 2023, 3:39 PM IST

சென்னை: பெருங்களத்தூர் பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் பூட்டு உடைக்கப்பட்டு ஐம்பொன் சிலை திருடப்பட்டதைத் தொடர்ந்து, அதே பகுதியில் வசித்து வந்த மூதாட்டி ஒருவரிடம் இருந்து நகை திருடப்பட்டதோடு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை தாம்பரம் அருகே பீர்கன்காரனை ஏரிக்கரை தெருவில் உள்ளது, செல்வ விநாயகர் கோயில். இந்த நிலையில், நேற்று இரவு இந்த கோயிலின் பூட்டை உடைத்து கருவறையில் இருந்த ஐம்பொன் சிலையை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இந்த கோயிலில் தொடர்ந்து 4வது முறையாக இந்த திருட்டு சம்பவம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த திருட்டு சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து, பெருங்களத்தூர் வேல் நகர் அம்பேத்கர் தெருவில் வசித்து வருபவர், ராஜம்மாள். 70 வயது மூதாட்டியான இவர் தனியாக வசித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வெகு நேரமாகியும் ராஜம்மாள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த அருகே இருந்த நபர் ஒருவர் ராஜம்மாளின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, ராஜம்மாள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையும் படிங்க: தேசிய தரச்சான்றிதழ் பெற அரசு வழங்கிய நிதியில் முறைகேடு..? - தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்தது என்ன?

இதனைத் தொடர்ந்து, இது குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கபட்டுள்ளது. பின்னர் தகவலறிந்து சென்ற பீர்கன்காரனை போலீசார் சம்பவம் குறித்து விசாரனை நடத்தியுள்ளனர். இதில் ராஜம்மாள் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் காணாமல் போயிருப்பது தெரிய வந்தது.

பின்பு மூதாட்டியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஒரே பகுதியில் நடந்துள்ள இந்த இரு வேறு குற்றச் சம்பவங்களில் ஒரே நபர் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து பீர்கன்காரனை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர். அப்பகுதியில் ஒரே நாளில் நடைபெற்ற இரு வேறு குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: தங்க பிஸ்கட்டை கடத்தியவர் கைது.. போலீசாரின் சோதனையில் சிக்கியது எப்படி?

ABOUT THE AUTHOR

...view details