சென்னை: மாநகராட்சி என்றாலே தரமான சாலை வசதிகள், மேம்பாலங்கள்,பாதாள சாக்கடை திட்டம், போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைந்ததாக இருக்கும். ஆனால் சென்னை மாநகராட்சிக்கு அடுத்ததாக புதியதாக உருவாகியிருக்கும் தாம்பரம் மாநகராட்சியில் சாலை வசதிகள் என்பதே ஒரு கேள்விக்குறியாக இருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
அண்மையில் தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைத்தவுடன் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்ததின் அடிப்படையில் தாம்பரத்தை சுற்றியுள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை ஒன்றிணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதால் தாம்பரம் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் பகுதிகளுக்கு அனைத்து சகல வசதிகளும் கிடைக்கும் என மகிழ்ச்சி அடைந்தனர்.
சாலை பணிகள் மெத்தனம்: ஆனால் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதிகள் சீரமைப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். முக்கிய இடங்களில் சாலை பணிகள் மிகவும் கால தாமதமாக நடைபெற்று வருவதாகவும், மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் முன்பே ஆரம்பிக்கப்பட்ட பல்வேறு சாலை பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கின்றனர்.
தாம்பரம் மாநகராட்சியில் முக்கிய சாலையான தாம்பரம், முடிச்சூர் சாலைப் பணிகள் பல மாதங்களாக நடைபெற்று வருவதால் அந்த சாலை வழியாக செல்லும் பல்லாயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நாள்தோறும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தாம்பரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லக்கூடிய முடிச்சூர் சாலையில் பாதாள சாக்கடை பணிகள், குடிநீர் குழாய் புதைக்கும் பணி சில மாதங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இதற்காக சாலையின் இருபுறமும் பள்ளங்கள் தோண்டப்பட்டு சாலைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன. இதனால் அவ்வழியாக செல்வோர் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியும் தினம்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் ஊர்ந்து செல்ல கூடிய நிலைதான் ஏற்பட்டுள்ளது.
தாம்பரம் மாநகராட்சி சாலையை சீரமைக்காததால் போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் குண்டும் குழியுமாக உள்ளது.அவ்வப்போது சாலையில் எடுக்கப்பட்டுள்ள பள்ளங்களில் சிக்கி விபத்துகளும் ஏற்படுகின்றன என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து முடிச்சூரை சேர்ந்த சுரேஷ் கூறியதாவது:
முடிவுக்கு வராத பாதாள சாக்கடை திட்டம்:முடிச்சூர் சாலையில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் நான்கு ஆண்டுகள் கடந்தும் தற்போது வரை பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் காரணமாக சாலையில் எடுக்கப்பட்டுள்ள பள்ளங்களால்அனைவரும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகுகின்றனர்.
முடிச்சூர் சாலை என்றாலே எப்போதும் அதிக வாகனங்கள் செல்லக்கூடிய சாலையாகும். காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. 10 நிமிடம் செல்லவேண்டிய தாம்பரத்திற்கு செல்ல ஒரு மணி நேரம் வரை ஆகிறது. அவசர நிலைக்கு ஆம்புலன்ஸ் கூட உடனடியாக செல்ல முடியாத சூழ்நிலை தான் உள்ளது.
இன்னும் சில இடங்களில் பாதாள சாக்கடை திட்டம் முறையாக அமைக்கப்படாமல் உள்ளது. பழைய பெருங்களத்தூர் அம்பேத்கர் சிலை முதல் பார்வதி நகர் வரை மிக விரைவில் கால்வாய்களை அமைத்து சாலையை சீரமைத்து தர வேண்டும், என தெரிவித்தார். மேலும் பழைய பெருங்களத்தூரை சேர்ந்த விமல் கூறுகையில்,