சென்னை:வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சவால் மற்றும் யுத்திகள் தொடர்பான கருத்தரங்கில் மாணவர்களிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி பேசும் போது, "இந்தியாவில் 1960,1980 மற்றும் 2020 என மூன்று முறை புதிய கல்விக் கொள்கைகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ஆனால் என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் முதல் புதிய கல்விக் கொள்கை என்பது இதுதான். முதல் இரண்டு கல்விக் கொள்கைகள் என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் கொண்டு வரப்பட்ட கல்வி குறித்தாக இருந்தன. அதனை மாற்றம் செய்வதாக மட்டுமே இருந்தன. தற்பொழுது வந்துள்ள கல்விக் கொள்கை என்பது புரட்சிகரமான ஒன்றாகும்.
சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளுக்கு மேல் ஆனப்பின்னரும் அதிகம் படிக்காத,வீடுகள் இல்லாத,ஏழைகள் உள்ள நாடாக இந்தியா உள்ளது. இந்த காலகட்டத்தில் கல்லூரி, மருத்துவமனைகள் , நிறுவனங்கள் உருவாகி உள்ளன. ஆனால் பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து உள்ளன. முன்னதாக இருந்த அமைப்பில் பல பிரச்சினைகள் இருந்தன, மக்கள் அரசு இடையிலான உறவு என்பது வாடிக்கையாளர் நிறுவனத்திற்கும் இடையிலான உறவு போல இருந்தது. அனைத்திற்கும் அரசை நோக்கி மக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது.
இந்தியா போன்ற மிகப் பெரிய நாடு தங்களுக்கான இடத்தை அடைய மாற்றங்கள் செய்ய வேண்டும். முந்தைய அரசு சென்ற பாதையில் சென்றால் அதனை அடைய முடியாது. இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் மாணவர்களுக்கு முறையான கல்வி கிடைக்க வேண்டும்,இந்த காலகட்டத்திற்குத் தேவையான கல்வி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும்.
தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டு வருகிறது, இதனைத் துரத்திப் பிடிக்கும் இடத்தில் நாம் இருக்கக் கூடாது, நாம் பெரிய அளவில் முன்னேற வேண்டும். அதற்கு இன்றைய தேவையைப் புரிந்து அவர்களுக்குத் தேவையான கல்வியை வழங்க வேண்டும். இந்த புதிய கல்விக் கொள்கை என்பது IAS அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மூலம் உருவாக்கப்படவில்லை, ஆயிரக்கணக்கான கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் மூலம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் பல லட்சம் மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்து வேலை கிடைக்காமல் உள்ளனர், இன்றைய காலகட்டத்தில் பட்டப்படிப்புகளை யாரும் பார்க்கவில்லை. தனித் திறமை என்ன உள்ளது எனப் பார்க்கின்றனர். மிகவும் வளர்ச்சி அடைந்த மாநிலமாகத் தமிழகம் உள்ளது, தமிழகத்தில் நிறைய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.