தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வரலாற்றை திருத்தி எழுத முயற்சிக்கும் வலதுசாரித்தனம் ! - கோபால் கோட்சே

நம் தேசத் தந்தை மகாத்மா காந்தி பிரிவினைவாத சக்திகளால் படுகொலை செய்யப்பட்டு கிட்டத்தட்ட 72 ஆண்டுகள் ஆகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த நாள் இந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் மக்களால் பெருந்துயர் மிகுந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது; உண்மைதான் மாற்றுக்கருத்தில்லை.

Right wing trying to rewrite history!
வரலாற்றை திருத்தி எழுத முயற்சிக்கும் வலதுசாரித்தனம் !

By

Published : Feb 1, 2020, 12:52 PM IST

காந்தியடிகளை வணங்குவதும் இந்திய விடுதலைக்கான அவரது போராட்டங்களை நினைவுகூருவதும் மட்டும் போதுமான ஒன்றா? என்றால் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மகாத்மாவுக்கு மரியாதை

எந்த நாட்டின் மதச்சார்பற்ற மக்களாட்சிக்காக, சகோதரத்துவத்திற்காக, சமத்துவத்திற்காக அவர் தன் வாழ்நாள் முழுதும் பாடுபட்டாரோ!
அவை தற்போது கேள்விக்குள்ளாகிவருவதை, அதன் மூலாதார கொள்கை வடிவமைப்பாளர்களாக இருப்பவர்களின் கடந்த கால வரலாற்று கதாபாத்திரங்களை அவற்றின் உண்மை முகங்களை சிதைத்து அவற்றை மாற்றி கட்டமைக்கும் போக்கு நம் கண்ணெதிரே நிகழ்ந்துவரும் வேளையில்...
அதனை அறிவுத் தளங்களில் தீவிரமாக எதிர்த்துப் போராடுவதும் ஒருவகையில் மகாத்மாவிற்கு செய்யும் மரியாதைதான்!

1948 ஜனவரி 30ஆம் தேதி காந்தி கொல்லப்பட்டார் என்பது ஒரு தனிமனிதனின் பைத்தியக்காரத்தனமான வெறிச்செயல் மட்டுமல்ல; மாறாக அது தனித்துவமான ஒரு சித்தாந்தத்தின் கோரமுகத்தை காட்டுகிறது என்பதே புலனாகிறது. மனிதத் தன்மையற்ற இந்தச் செயல் நிகழ்ந்தேறிய நாள் ஒவ்வொரு ஆண்டும் துயர்மிகுந்த நாளாக அனுசரிக்கப்படுகிறது.

தள்ளாடும் வயதில் அந்த அரைநிர்வாண பக்கிரியான காந்தி சகிப்புத்தன்மை, இந்து-இஸ்லாமிய சகோதரத்துவத்தை வலியுறுத்தி ஒரு ஜனநாயகவாதியாக ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார்.

'அந்த' சிந்தாந்தம்

'இந்து பாகிஸ்தான்' என்று ஜவஹர்லால் நேரு அழைத்ததை 'இந்தியா'வாக மாற்ற விரும்பிய கடைநிலை மக்களின் கோரிக்கைகளின் பிரதிநிதியாக பிரதிபலித்தார். தொடர்ந்த அவரது அறப்போர் குரல் போராடி அதனை அப்புறப்படுத்தியது.

காந்தியின் சத்தியவாழ்வை தோட்டாக்களால் முடித்த கொலையாளி நாதுராம் கோட்சே, மக்களை பிறப்பின் அடிப்படையில் வகைப்படுத்தும் ஏற்றத்தாழ்வை 'தர்மம்' எனப் போற்றும் ஒரு சித்தாந்தத்தின் முகவராக இருந்தார்.

குறிப்பிட்ட மக்களின் மேலாதிக்கத்தை நிலைநாட்ட முற்படும் ஒரு சித்தாந்தம், அதன் அரசியலை மிக வலிமையாக எதிர்க்கும் வெகுமக்களின் தலைவராக காந்தி காலத்தால் மாறி இருந்தார். மாற்றம் ஒன்றே மாறாதது இல்லையா?

அந்த சித்தாந்தத்தின் ஆணிவேராக இருந்தது ஜெர்மானிய 'நாசி' இனவாத மேலாதிக்க கருத்தாகும். இந்தியாவை ஒரு குறிப்பிட்ட மதத்தின் அரசாக உருவாக்கும் சிலரின் கனவுக்கு மிகவும் உறுதியான தடையாக அப்போது காந்தி மாறியிருந்தார். ஏனென்றால் யார் ஒடுக்கப்பட்டாலும் அங்கு நடைபெறும் அநீதிக்கு எதிராக முதல் ஆளாக நிற்பவர் அவர்.

நேரு அரசின் மீது அழுத்தம்

இந்தியாவின் பிரிவினைக்குப் பிறகு, வேறு நாட்டவராக உளவியலாக மாறி நின்ற பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்த இஸ்லாமியர்கள் மத்தியில் காந்தியின் செல்வாக்கு இயல்பாகவே குறைந்திருந்தது.

எவ்வாறாயினும், இந்திய மக்கள் அவரின் பால்கொண்டிருந்த பேரன்பும், காந்தியின் இயல்பான அதிகாரமும் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தின் மீது வலுவாக அழுத்தம் கொடுத்தது.

பாகிஸ்தானோடு இணைந்த மக்களுக்கு அவர்களுக்குரிய சொத்துகளை பகிர்ந்தளிக்கவும் இங்குள்ள இஸ்லாமிய மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கும் இந்தியாவை அழுத்தமாக வலியுறுத்தும் பரப்புரையாளராக காந்தி திகழ்ந்தார்.

எது மெய், எது பொய்?

இது வலதுசாரி கருத்தியலாளர்களின் பார்வையில், இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளாக உறுதிபடுத்தியது. 70 ஆண்டுகளில், குறிப்பிட்ட அந்த சிந்தாந்தத்தின் தாய் அமைப்பு தனது கடந்த கால பிம்பங்களை மாற்றியமைப்பதில் கவனம் செலுத்தியது. அதேவேளையில் அது தனது சித்தாந்தத்தில் மாற்றத்தை கொண்டுவர முன்வரவில்லை.

காந்தி கொல்லப்பட்டதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அந்த அமைப்பு மறுத்துவந்தாலும் உண்மை வேறுவிதமாகவே இருக்கிறது.

காந்தியை துப்பாக்கியால் சுட்ட 'கோட்சே அந்த மதவாத அமைப்பில் உறுப்பினராக இருந்தார்' என்ற அதன் முந்தைய ஒப்புதல், நீண்டகாலத்திற்கு முன்பே தங்கள் அமைப்பிலிருந்து அவர் விலகினார் என்ற சந்தேகத்திற்குரிய கூற்று முன்வைக்கப்பட்டது. இது பலவிதமான கேள்விகளின் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.

காந்தியின் கொலைக்குப் பின் கைதுசெய்யப்பட்ட நாதுராம் கோட்சே தனது வாக்குமூலத்தில், "காந்தியின் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்ப்பது என்பதை தார்மீக மதக் கடமையாக நான் கருதுகிறேன். முடிந்தால், அத்தகைய எதிரியை எத்தகைய சக்தியைப் பயன்படுத்தியும் வெல்வேன்" என்று ஒப்புக்கொண்டார்.

அறிக்கையே பதில்!

அந்த அமைப்பின் அப்பாவித்தனமான விளக்கத்துக்கு 'சான்றுகளை' தேடியலைந்தால், காந்தி படுகொலையின் சூழலை விசாரிக்க 1966ஆம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்ட ஒரு சுதந்திர விசாரணை ஆணையத்தின் அறிக்கையே பதிலாகக் கிடைக்கிறது.

அந்த அறிக்கை முக்கியத் தகவல்களைத் தெளிவாக மேற்கோள் காட்டியுள்ளது. அந்த அறிக்கை ஒன்றை தெளிவுபடுத்துகிறது.
காந்தியின் படுகொலைக்குப் பிறகான 'அந்த' அமைப்பின் உற்சாகக் கூற்றுகள் நெருக்கமான ஆய்வுக்குட்படுத்தப்படும்போது காந்தி படுகொலை குறித்த மறுதலிப்புகள் இங்கே வீழ்ச்சியடைகின்றன.

இதன்படி, கோட்சே அந்த அமைப்பின் உறுப்பினராக இணைந்திருந்தார் என்பது சர்ச்சைக்கும் சந்தேகத்திற்கும் இடமில்லாமல் நிரூபணமாகிறது. ஏனெனில் அவர் உறுப்பினராக இருந்தார் என்று அந்த அமைப்பே ஒப்புக்கொள்கிறது.

வரலாற்றை திருத்தி எழுத முயற்சிக்கும் வலதுசாரித்தனம் !

ஆதாரம் 1

முதலாவதாக, அந்த அமைப்புக்கு முறையான உறுப்பினர் விண்ணப்பம் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும். அந்த அமைப்பின் கொள்கையில் நம்பிக்கையும் பற்றும்கொண்ட எவரும் அதன் உறுப்பினராகலாம்.

சனாதனத்தின் மீது பெரும்நம்பிக்கையைக் கொண்டிருந்த கோட்சே, அந்த அமைப்பின் நம்பிக்கையைப் பிரதிபலித்தார் என்பதை மறுக்கமுடியாதது. அதேபோல அவர் அந்த அமைப்பிலிருந்து விலகினார் என்பதை நிரூபிக்க அவ்வமைப்பு இன்றுவரை, ஒரு சிறிய ஆதாரத்தைக்கூட காட்ட முடியவில்லை.

ஆதாரம் 2

நீதியரசர் ஜீவன் லால் கபூர் தலைமையிலான ஆணையத்தின் (1969) அறிக்கையில், அந்த அமைப்பின் குற்றப் பின்னணியையே முதன்மை சாட்சியாகப் பதிவுசெய்துள்ளது.

மேலும் அதில், தான் படுகொலைசெய்யப்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இந்த அமைப்பு தடைசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று சொன்னவர் மகாத்மா காந்தி.

ஆணையக்குழுவின் அறிக்கையில், 'ஆர்.எஸ்.எஸ்., தீவிர இந்து மகாசபா தலைவர்களின் நிபந்தனைகள் மகாத்மா காந்திக்கு எதிரான ஒரு வலுவான எதிர் மனநிலையை ஊக்கமளித்து உருவாக்கின' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் கபூர் ஆணையம் ஒரு நியாயமான சந்தேகத்திற்குட்பட்ட ஆர்.எஸ்.எஸ் அமைப்பு உண்மையான குற்றவாளியாகக் காணப்படவில்லை ஏனென்றால் தக்க புதிய சான்றுகள் வெளிவருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அது தனது விசாரணையை முடித்தது என்பதே காரணம்...

ஆதாரம் 3

1990 ஆம் ஆண்டுகளில் தான் ஆர்.எஸ்.எஸ் உடனான கோட்சே கொண்டிருந்த உறவு பற்றிய புதிய தகவல்கள் வெளிவரத் தொடங்கின.

1994 ஆம் ஆண்டில், நாதுராம் கோட்சேவின் உடன்பிறந்த இளைய சகோதரரும் படுகொலை சதித்திட்டத்தில் இணைந்திருந்த சதிகாரருமான கோபால் கோட்சே, "அவ்வமைப்பு எங்களுக்கு ஒரு குடும்பம் போல" ஆர்.எஸ்.எஸ்ஸை பாதுகாக்க அவரது மூத்த சகோதரர் மிகுந்த கவனத்தோடு இருந்ததை அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.

"[நாதுராம்] அவர் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு வெளியேறியதாக தனது அறிக்கையில் கூறியிருந்தாலும் அது உண்மையில்லை", கோபால் கோட்சே தொடர்ந்தார். "நாதுராம் கோட்சே அதைச் சொன்னதற்கு ஒரு காரணமிருந்தது ... நூறாண்டுகளுக்கு செயல்திட்டம் வகுத்திருந்த ஆர்எஸ்எஸ், காந்தி படுகொலைக்குப் பிறகு மிகப்பெரிய அளவில் புற அழுத்தங்களுக்குள்ளாகி சிக்கலில் மாட்டிக்கொண்டிருந்தது. அதிலிருந்து அவர்களைக் காப்பாற்றத்தான், அமைப்பைவிட்டு நீண்ட நாட்களுக்கு முன்னரே தான் வெளியேறியதாக அவர் கூறினார். ஆனால் அவர் ஆர்எஸ்எஸ்ஸை விட்டு கடைசிவரை வெளியேறவேயில்லை".

ஆர்.எஸ்.எஸ்ஸில் வாழ்நாளெல்லாம் உறுப்பினராகவே வாழ்ந்து மறைந்த தனது சகோதரரின் இடைவிடாத உறுப்பினர் பங்களிப்பை மறுப்பவர்களின் "கோழைத்தனத்தை" கோபால் கோட்சே அப்பேட்டியில் வெளிப்படையாகவே கண்டித்திருந்தார்.

கோபால் கோட்சேவின் அறிக்கையை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்த இன்னொரு மிக முக்கியமான ஆதாரம் இடதுசாரி சார்பு அறிஞர் டாக்டர் கோயன்ராட் எல்ஸ்ட், 2001 ஆம் ஆண்டு எழுதிய காந்தி மற்றும் கோட்ஸே என்ற நூல் சான்றளிக்கிறது. "நாதுராம் ஆர்.எஸ்.எஸ்ஸுடன் தனக்கு ஒட்டுமில்லை உறவுமில்லை என்ற தோற்றப்பாட்டை உருவாக்க நினைத்திருந்தார். அவர் அவ்வமைப்பும் அதன் தலைவர்களும் உறுப்பினர்களும் தனக்கு கொஞ்சம்கூட உதவி செய்யவில்லை என்ற எண்ணத்தை உருவாக்க திட்டமிட்டார், காந்தி படுகொலைக்குப் பிந்தைய நாட்களில் அவ்வமைப்புக்கு தன்னால் அதிக சிக்கல்கள் உருவாவதைத் தவிர்ப்பதற்காக..."

மேலே குறிப்பிட்ட பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர்களே தாமாக தந்த புதிய ஆதாரங்களை, அளித்த ஒப்புதல் வாக்குமூலங்களை மறுதலிக்கும் அவர்களின் பொய்களை ஒருபோதும் அவர்களால் மறைக்க முடியாது.

ஓய்வுபெற்ற நீதியரசர் ஜீவன் லால் கபூரின் தலைமையிலான ஆய்வுக்குழுவைப் போல இன்று ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டால் நீதியரசர் லோயா போல மர்மமான முறையில் மரணிப்பார் இல்லையென்றால் காந்தி என்ற ஒருவர் பிறக்கவே இல்லை என்றே அறிக்கை சமர்பிப்பார். இது தான் நாட்டின் எதார்த்த நிலை. காந்தி படுகொலை குறித்து பள்ளிக்கூட தேர்வுகளில் கேட்கப்படும் ஒரு வினா போல...

வலதுசாரித்தனம் இப்போது அரசியல் ரீதியாக உயர்ந்து நிற்கிறது. "இந்துத்துவத்திற்கு" அர்ப்பணிப்புடனும், ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பதற்றமான சூழலையும் உருவாக்குகிறது. அந்த சூழலை உருவாக்க அது தன் கடந்த கால வரலாற்றை மூடிமறைத்து வரலாற்று திரிபுகளை மேடையேற்றி வருகிறது.

அந்த திரிபு வரலாற்றை அதன் சொந்த கேள்விக்குரிய சொற்களில் வைத்தே ஆராயும் பகுப்பாய்வை இளந்தலைமுறை இந்தியத் துணைக்கண்டத்தில் செய்ய தொடங்கிவிட்டன. அதை நாமும் மதிப்பீடு செய்வோம் ...

அதன் அதிகாரத்திற்கு முன்னால் அடிபணியாது நாமும் மகாத்மா காந்தியின் வழியில் அகிம்சை சத்தியாகிரகத்தை கைக்கொள்வோம். மரபு என்று சொல்லப்படும் "இந்திய பன்மைத்தன்மையை" "மதநல்லிணக்கத்தை" "சகோதரத்துவத்தை" "சகிப்புத்தன்மையை" "ஜனநாயகத்தை" காக்க உறுதி பூணுவோம்.

அதுவே காந்தியாருக்கு நாம் செய்யும் இறுதி வணக்கம் ஆகும்.

ABOUT THE AUTHOR

...view details