சென்னை: ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமுதாயத்தில் அடித்தளத்திலுள்ள ஏழை எளிய மக்கள் சிறப்புற வாழ வழி செய்யும் வகையில், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்தினை அவ்வப்போது கண்காணித்து, அதனைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய மாநில அரசுகளுக்கு உள்ளது. அதற்கு முற்றிலும் முரணாக தமிழ்நாடு அரசு தன் பங்கிற்கு பல்வேறு கட்டண உயர்வுகள் மூலம் விலைவாசி உயர்விற்கு வழிவகுப்பதும், மத்திய அரசு தன் பங்கிற்கு வரிகளை உயர்த்தி விலைவாசி ஏற்றத்திற்கு வழிவகை செய்வதும் மக்களை வாட்டி வதைக்கும் செயல். இந்த வரிசையில், தற்போது நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணத்தை ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்த தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. இது எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் 800-க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருந்து வரும் நிலையில், கிட்டத்தட்ட 600 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்கச்சாவடிகள் மூலம் வசூலிக்கப்படும் கட்டணத்தை ஆண்டுக்கு ஒருமுறை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்திக் கொண்டே வருகிறது. அந்த வகையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் சுங்கக்கட்டணத்தை 10 விழுக்காடு வரை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
நாட்டிலேயே சுங்கச்சாவடிகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையில், இதில் பெரும்பாலான சுங்கச்சாவடிகள் அதன் கால அளவைக் கடந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை மூடப்பட வேண்டும் என்ற கருத்து மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டிருக்கின்ற நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுவது நிறுத்தப்பட வேண்டுமென்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இவற்றிக்கு எல்லாம் மதிப்பளிக்காமல் தேசிய நெடுஞ்சாலை திட்ட ஆணையம் தன்னிச்சையாக கட்டண உயர்விற்கு பரிந்துரை செய்வது என்பது விலைவாசி உயர்விற்கு வழிவகுக்கும் செயலாகும்.