தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கட்டாய ஓய்வு பெற்ற இரிணா! விடை பெற்ற இரிணா மோப்ப நாய்க்கு சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் மரியாதை! - Chennai Airport Customs Department

Irina Dog retires in Chennai Airport Cargo Department: சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய்கள் பிரிவில் பணியாற்றிய இரிணா நாய்க்கு கட்டாய ஓய்வு வழங்கப்பட்டது. இரிணாவை தத்தெடுக்க விரும்பும் தன்னார்வலர்கள் அதற்கான சான்றுகளை சமர்பித்து தத்தெடுக்கலாம் என சுங்கத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

Chennai Airport
இரிணா மோப்பநாய்க்கு கட்டாய ஓய்வு

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 2, 2023, 8:47 AM IST

சென்னை: சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான நிலைய வளாகத்தில் உள்ள கார்கோ பகுதிக்கு, வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் கடத்தல் பொருட்கள் வருகின்றன. முன்னதாக தங்கம் மற்றும் மின் சாதன பொருட்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்டன.

ஆனால் தற்போது போதைப் பொருட்கள், போதை மாத்திரைகள், புகையிலையிலான சிகரெட், பதப்படுத்தப்பட்ட கஞ்சா ஆகிய போதை பொருட்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் இருந்து கடத்தி கொண்டு வரப்படுகின்றன. இவைகளை கண்டுபிடிப்பதில், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மட்டுமே செயல்படுவது மிகப்பெரிய சவாலாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சென்னை விமான நிலைய சுங்கத் துறையில் மோப்ப நாய் பிரிவு புதிதாக தொடங்கப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி என்ற பகுதியில், சுங்கத்துறை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, எல்லைப் பாதுகாப்பு படை, மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை, ரயில்வே பாதுகாப்பு படை ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் நிலையம் உள்ளது.

பயிற்சி மையத்தில் இருந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவுக்கு, ஓரியோ, ஆர்லி என்ற ஒரு வயது உடைய இரண்டு மோப்ப நாய்கள், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பரில் வந்தன. இதில் ஓரியோ நாய் போதைப் பொருட்களை மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பதிலும், ஆர்லி மோப்ப நாய் வெடி பொருட்கள் உட்பட அபாயகரமான பொருட்களைக் கண்டுபிடிப்பதிலும் கைதேர்ந்ததாக காணப்பட்டன.

சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருவதால், அவைகளை கண்டுபிடிப்பதற்காக கடந்த 2022ஆம் ஆண்டு இரிணா என்ற மோப்ப நாய், 10 மாத பயிற்சியை முடித்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை மோப்ப நாய் பிரிவில் இணைந்தது. அதன்பின், சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில் 3 மோப்ப நாய்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தன.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில், போதைப்பொருள் கடத்தலைக் கண்டுபிடிப்பதில் நிபுணராக செயல்பட்டு வந்த சுமார் 3 வயதுடைய இரிணா மோப்ப நாய்க்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு வந்தது. ஆனாலும் இரிணா உடல் நலப்பாதிப்பை பற்றி கவலைப்படாமல் சிறப்பாக பணியாற்றி வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் இரிணா நோய் வாய்பட்டது குறித்து மிகுந்த கவலை அடைந்தனர்.

இதையடுத்து விலங்கியல் நிபுணர்கள், விலங்குகள் மருத்துவ நிபுணர்கள், இரிணாவை பரிசோதித்து விட்டு, அதற்கு கட்டாய ஓய்வு அளிப்பது நல்லது என்ற கருத்தை தெரிவித்தனர். சென்னை விமான நிலைய மோப்பநாய் பிரிவில் மிகச் சிறப்பாக பணியாற்றி வந்த போதைப் பொருட்களைக் கண்டுபிடிக்கும் நிபுணரான மோப்ப நாய் இரிணாவுக்கு, கடந்த அக்டோபர் 31ஆம் தேதி மாலையுடன் பணியில் இருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் இரிணாவுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சியை சுங்கத்துறை அதிகாரிகள் கணத்த இதயத்துடன் செய்து வழி அனுப்பினர். அதன்பின் ஓய்வு பெற்ற மோப்பநாய் இரிணா, பஞ்சாபில் உள்ள மத்திய மோப்ப நாய்கள் பிரிவில், ஓய்வு பெற்ற, உடல் நலம் பாதிக்கப்பட்ட நாய்கள் புணர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

விலங்கியல் ஆர்வலர்கள் மற்றும் நாய்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டும் சமூக ஆர்வலர்கள், விருப்பப்பட்டால் அங்கிருந்து முறையான ஆவணங்களை சமர்ப்பித்து இரிணாவை தத்து எடுத்து வளர்த்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையே சென்னை விமான நிலையத்தில் மோப்ப நாய் பிரிவில் இரிணாவின் இடத்தை நிரப்புவதற்கு இரண்டு மோப்ப நாய்கள் வெகு விரைவில் வர உள்ளன.

பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் உள்ள மோப்ப நாய்கள் பயிற்சி மையத்தில் கடத்தல் பொருட்களை கண்டுபிடிப்பதற்கான 10 மாத பயிற்சியை பெற்று வரும் ஒரு வயதுடைய 2 மோப்ப நாய்கள், சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு வர இருக்கின்றன. இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் உள்ள மோப்ப நாய்களின் எண்ணிக்கை நான்காக உயர உள்ளது என விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:ரயில் மோதி யானைகள் உயிரிழப்பை தவிர்க்க திட்டம்! ரயில் பாதைகளில் செயற்கை நுண்ணறிவு கேமரா பொருத்தி சோதனை!

ABOUT THE AUTHOR

...view details