சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி உணவுப் பற்றாக்குறையிலுள்ளவர்களுக்கு உணவு வழங்கிவருகின்றனர்.
தற்போது, சென்னை உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சென்னை மாநகராட்சியால் தடைசெய்யப்பட்ட பகுதிகளான அரசு பொது மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார மையங்கள், கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரிசோதனை மையங்கள், பெருந்தொற்று நோய் சிகிச்சை வழங்க அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் போன்ற பகுதிகளுக்கு அருகில் உள்ள இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்பட்ட இடங்களில் உணவு வழங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள், அரசு சாரா அமைப்புகளுக்கான நிபந்தனைகள்
• சென்னை மாநகராட்சியால் தடைசெய்யப்பட்ட பகுதிகள் ஆபத்தான பகுதிகள். ஆதலால் அப்பகுதிகளைச் சுற்றி 2 கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்பட்ட இடங்களில் உணவு வழங்குவது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது
• மேற்கண்ட தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க வேண்டுமென்றால், சென்னை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிடங்குகளில் உணவுப்பொருள்களை அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவ்விதம் பெறப்பட்ட உணவுப்பொருள்கள் முறையாக, உணவு பரிசோதனை மேற்கொண்ட பின் மாநகராட்சி மூலம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும்.
• உணவு, உதவிப் பொருள்கள் வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பாக சென்னை மாநகராட்சி சம்பந்தப்பட்ட மண்டல அலுவலரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். உணவு வழங்கும் இடம், இதர விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
•மண்டல அலுவலர் உணவுப் பாதுகாப்புத் துறை மூலம் உணவு வழங்கும் இடத்தை ஆய்வுசெய்வது, உணவு வழங்க உகந்த இடமா எனக் கண்டறிந்த, பின்னர்தான் உணவு வழங்க வேண்டும்.