சென்னை: இந்தியா முழுவதும் 8 ஆயிரத்து 955 கிலோ தங்கம் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிலிருந்து தங்கத்தை விமானம் வழியாக புதுப்புது முறைகளில் குருவிகள் மறைத்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டில் குறைந்த விலையில் கிடைக்கக் கூடிய தங்கத்தை எந்தவித வரியும் இல்லாமல் விமானத்தில் கடத்தி வந்து தமிழ்நாட்டில் விற்பனை செய்தால் பல மடங்கு வருமானம் கிடைக்கும். அதனால் குருவிகள் மூலமாக கமிஷன் அடிப்படையில் ஷூ, விக் என உடம்பில் மறைத்து வைக்க முடியாத இடத்தில் எல்லாம் வைத்து உயிரை பணயம் வைத்து கடத்தி வருகின்றனர்.
இப்படி வெளிநாட்டிலிருந்து விமானம் மூலமாக கடத்தி வரப்படும் தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் கடந்த 2020ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை வெளிநாடுகளிலிருந்து தங்கம் கடத்தி வரப்பட்டதாக 2 ஆயிரத்து 337 வழக்குகள் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் ஆயிரத்து 317 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, 2020ஆம் ஆண்டு 676 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 375 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல், 2021ஆம் ஆண்டு 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 322 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.