சென்னை: கோட்டூர்புரத்தில் நீர் வழித்தடங்கள் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு கொசு வலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்களுக்கு கொசு வலைகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வடகிழக்கு பருவமழையை ஒட்டி சென்னையில் நீர் வழித்தடங்கள் அருகில் வசிக்கும் மக்களுக்கு ரூ.2.60 ஆயிரம் மதிப்பிலான கொசு வலைகளை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தப் பகுதியில் 23 ஆயிரம் குடும்பங்களுக்கு கொசு வலை வழங்கப்பட உள்ளது. பருவமழை காலத்தில் கொசுக்களால் பரவும் நோய்த் தொற்றுகளை தடுக்கும் விதமாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மழைக்கால நோய்களை தடுப்பதற்காக 48,187 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடைபெற்றன. பள்ளிகளில் 389 நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. 55 நாட்களில் நடத்தப்பட்ட முகாம்களில் 76 லட்சத்து 8 ஆயிரத்து 504 நபர்கள் பயனடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக 55 நாட்கள் மருத்துவ முகாம் நடத்தப்படுவது இதுவே முதல்முறை.
மழைக்காலத்தை எதிர்கொள்ள பிளீச்சிங் பவுடர், குளோரின் கைத்தெளிப்பான், புகை பரப்பும் இயந்திரம் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்களில் இருந்து பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இதுவரை ஐந்து நபர்கள் டெங்குவால் இறந்துள்ளனர்.