இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ரெம்டெசிவிர் ஊசி மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவும் சூழலில், தேவைப்படும் கரோனா நோயாளிகளுக்கு கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், தமிழக அரசே அந்த மருந்தை நேரடியாக விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறது. அதேபோல், 18 வயது நிறைவடைந்தோருக்கு தடையின்றி தடுப்பூசி போடுவதற்காக ஒன்றரை கோடி டோஸ் தடுப்பூசிகளை நேரடியாக கொள்முதல் செய்யவும் அரசு தீர்மானித்திருக்கிறது. கரோனா தடுப்புக்கான இந்நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவை.
கரோனா நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்காக ரெம்டெசிவிர் ஊசி மருந்து செலுத்தப்படுகிறது. கரோனா இரண்டாவது அலையில் லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ரெம்டெசிவிர் மருந்துக்கான தேவை பல மடங்கு அதிகரித்திருக்கிறது.
அனைத்து மக்களுக்கும் இந்த மருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த மருந்தின் விலை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு ஆணையிட்டதைத் தொடர்ந்து ரூ.5400 வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு டோஸ் ரெம்டெசிவிர் மருந்தின் விலை ரூ.899 முதல் ரூ.3490 என்ற அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், பதுக்கல் காரணமாக ரெம்டெசிவிர் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. சில இடங்களில் ஒரு டோஸ் ரெம்டெசிவிர் மருந்து விலை ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
ரெம்டெசிவிர் மருந்து தேவைப்படுவோருக்கு வழங்கும் வகையில் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக அலுவலகத்தில் 6 டோஸ் ரெம்டெசிவிர் மருந்து ரூ.9,400 என்ற விலையில் விற்கப்படுகிறது.
கரோனா நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் குடும்பத்தினரிடையே இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.