சென்னை: பள்ளிகளில் பாலியல் புகார் அளிக்க புகார் பெட்டி அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாநில திட்ட இயக்குநர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இது குறித்து அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
1. தற்போதைய சூழலில், மாணவ, மாணவியரின் பாதுகாப்பு - அவசியம் கருதி, அனைத்து அரசுப் பள்ளிகளிலும், பள்ளித்தலைமையாசிரியர் தலைமையில், இரண்டு ஆசிரியர்கள், ஒரு பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், ஒரு ஆசிரியரல்லாத பணியாளர், ஒரு நிர்வாகப் பணியாளர், ஒரு வெளி உறுப்பினர் (விருப்பப்பட்டால்) ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (Students Safeguarding Advisory Committee - SSAC) உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
குழு உறுப்பினர்களின் கூட்டம் மாதம் ஒருமுறை நடத்தப்பட வேண்டும். அனைத்து ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு மாணவர்களின் பாதுகாப்புப் பற்றிய பயிற்சி பின்னர் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கெதிராக புகார் அளிக்கும் எண் - 14417 2. விடுவிக்கப்பட்ட நிதியினைப் பயன்படுத்தி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கான பாதுகாப்பு பெட்டி (Safety Box) வைக்கப்பட வேண்டும். பெட்டியானது 14.5*12*7 அங்குலம் நீளம், அகலம், உயரம் அளவு கொண்டதாக இருக்க வேண்டும். கீழ்க்காணும் படத்தில் உள்ளவாறு பெட்டியில் 'மாணவர் மனசு' என எழுதப்பட்டிருக்க வேண்டும்.
மேலும் பெட்டியானது பள்ளித் தலைமையாசிரியரின் அறைக்கு முன்பாக அனைத்து மாணவர்களும் பார்க்கும் படியானதொரு இடத்தில் மாணவர்கள் எளிதில் அணுகக்கூடிய உயரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
அறிவுறுத்த, பாதுகாப்புப் பெட்டி பள்ளியில் வைக்கப்பட்ட பிறகு அது பற்றிய விழிப்புணர்வைப் பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்துதல் வேண்டும். 'மாணவர்கள் தங்களுக்குப் பள்ளியில் ஏதேனும் இடர்ப்பாடுகள் இருப்பின் அவற்றை எழுதி பெட்டியில் போட வேண்டும். 15 நாள்களுக்கு ஒருமுறை பாதுகாப்புப் பெட்டியை மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக் குழு (Students Safeguarding Advisory Committee) உறுப்பினர்களின் முன்னிலையில் திறந்து அதிலிருக்கும் புகார்களுக்கு உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
பள்ளிகளில் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான விழிப்புணர்வு 3. மேலும், விடுவிக்கப்பட்ட தொகையைப் பயன்படுத்தி, அனைத்துப் பள்ளிகளிலும், பள்ளியின் நிலைக்கேற்ப (தொடக்கநிலை, நடுநிலை, உயர் - மேல்நிலைப் பள்ளி) கீழ்க்காணுமாறு மாணவர்களுக்கான விழிப்புணர்வு நெகிழ் பலகை (Flex Board) வைக்கப்பட வேண்டும். அதன் அளவானது 6 அடி நீளம், 4 அடி அகலம் கொண்டதாக இருக்க வேண்டும்.
பள்ளிகளில் பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான விழிப்புணர்வு மேலும் அதில், தகவல் பலகையானது பள்ளித் தலைமையாசிரியரின் அறைக்கு முன்பாக அனைத்து மாணவர்களும் பார்க்கும் படியானதொரு இடத்தில் மாணவர்கள் எளிதில் படிக்கக்கூடிய உயரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என அனைத்து அரசுப் பள்ளி தலைமையாசிரியர்களையும் கேட்டுக் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: காவல் சரகங்களையும் அமைக்க சிறப்பு அலுவலர்கள் மூலம் திட்டம்