சென்னை:கூட்டுறவு வங்கிகளின் மூலம் வீட்டு மனை வாங்க கடனுதவி வழங்கப்படும் என கூட்டுறவுத் துறையின் சார்பில் புதிதாக 44 அறிவிப்புகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தமிழ்நாடு சட்டப் பேரவையில் வெளியிட்டுள்ளார். அதன் பட்டியல்,
சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் இரண்டு புதிய வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் அமைக்கப்படும். மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக புதிதாக ஒன்பது மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்படும். ஐந்து இதர வகை கூட்டுறவு சங்கங்கள் மலைவாழ் மக்கள் பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்களாக மாற்றப்படும். வேலூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு புதிய கிளை துவங்கப்படும்.
மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கங்களுக்கு 5% என்கிற குறைந்த வட்டியில் தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கியே கடனுதவி வழங்கும். நீலகிரி மாவட்டத்தில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வரும் பந்தலூர் மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும்.
சேலம் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் உள்ள இரண்டு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு சங்க கட்டடங்கள் நவீன மயமாக்கப்படும் ராமநாதபுரம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் புதிதாக இரண்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் துவங்கப்படும். கூட்டுறவு வங்கிகளின் மூலம் வீட்டு மனை வாங்க கடனுதவி வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளின் நாட்டுப்புறக் கலைஞர்கள் பாரம்பரிய கலைப் பொருட்கள் தயாரிக்கும் பணியில் உள்ளவர்களுக்கு சிறப்பு கடன் உதவி வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளின் மூலம் மூத்த குடிமக்களுக்கு மறு அடமான கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளின் மூலம் ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வாகனம் வாங்க கடன் வழங்கப்படும்.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிட கடன் வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறும் உறுப்பினரின் வயது உச்சவரம்பு 60 இலிருந்து 70 ஆக உயர்த்தப்படும். தர்மபுரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் தனிநபர் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்படும்.