சென்னை: சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை அமைந்து உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் நீர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் விவசாய நிலங்களுக்கு பாசன ஆதாரமாக விளங்குகிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் உள்ள 17.37 லட்சம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. டெல்டா பகுதி விவசாயிகள் இந்த நீரை நம்பியே குறுவை சாகுபடி செய்வர்.
இந்த மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக நீர் திறக்கப்படும். ஆனால் வழக்கத்திற்கு மாறாக கடந்த ஆண்டு மழையால் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில், ஜூன் 12 ஆம் தேதிக்கு முன்பாகவே மே 24ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறந்து விட்டபட்டது.
மேட்டூர் அணை வரலாற்றிலேயே, கோடை காலத்தில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிகழ்வு முதல் முறையாக நிகழ்ந்தது. இது டெல்டா விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த வகையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து வழக்கம் போல ஜூன் 12ஆம் தேதி டெல்டாவின் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.